வாக்கு உங்கள் உரிமை: அதனை தலைமறைவாக வழங்க வேண்டியதில்லை - எம்.திலகராஜ்

Report Print Gokulan Gokulan in சமூகம்

வாக்கு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமை, வாக்கு கேட்டு வருபவர்கள் எப்படி பகிரங்கமாக கேட்டு வருகிறார்களோ அதேபோல அதனை வழங்குபவர்களும் பகிரங்கமாகவே அதனை வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணம் - நோர்வூட், டன்கெல்ட் கீழ்ப்பிரிவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் மக்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டு கருத்துரைக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

வாக்களிப்பு இரகசியமாக இடம்பெறுவது ஜனநாயகம். ஆனால் வாக்களிப்பவர் தான் யாருக்கு வாக்களிக்கிறார் என்பதை வெளிப்படுத்தி அவர்களிடம் சேவையைப் பெற்றுக் கொள்வது மக்களது உரிமை. அதில் தலைமறைவு அவசியமில்லை.

டங்கெல்ட் தோட்டத்திற்கு இன்று தான் நான் முதன் முதலாக வருகிறேன். அப்படியானால் நான் இங்கு வாக்கு சேகரிக்க கூட வரவில்லை என்று தான் அர்த்தம்.

நீங்கள் எங்களுக்கு வாக்கு வழங்கவில்லை என்பதும் உங்கள் மனசாட்சிக்கும் தெரியும். இருந்தபோதும் உங்கள் ஊருக்கு முதன்முதலாக வரும் நான் 20 இலட்சம் பெறுமதியில் பாதையின் ஒரு பகுதியை அமைத்துக்கொடுத்து உள்ளதுடன் இளைஞர்களுக்காக அமைச்சர் திகாம்பரத்தின் நிதியின் ஊடாக விளையாட்டு மைதானம் புனரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ரூபாய் 5 இலட்சம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

இங்கே வந்த பின்னர் தான் தெரிகிறது இந்த பாதை அபிவிருத்திக்கு 20 இலட்சம் அல்ல. இரண்டு கோடிக்கு மேல் தேவை என்பது. இத்தகைய காலத்தில் இந்த பகுதியை கோட்டை என ஆட்சி செய்து பாதையை கூட பராமரிக்காதே வந்துள்ளனர் என்பதை எண்ணி அவர்கள் வெடகப்படல் வேண்டும்.

நீங்களும் கோட்டைக்குள்ளேயே வாழ்ந்து கூனிப் போய் விட்டீர்கள். இங்கு வாழும் மக்களைப் பார்க்க எனக்கு கவலை ஏற்படுகிறது. அழகிய காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அண்மையில் இருந்தும் உங்கள் வாழ்க்கை அழகாக இல்லை.

இந்த ஊர் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினை இந்த 6 கிலோ மீற்றர் பாதையை அபிவிருத்தி செய்வதிலேயே உள்ளது என உணர்கிறேன. அதனை கட்டம் கட்டமாக மேற்கொள்வோம்.

பிரதேச சபை தேர்தலில் இந்த வட்டாரத்தின் எமது வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை. சிலர் தலைமறைவாக வாக்களித்ததாகவும், 4 பேர் அளவில் மாத்திரமே வாக்களித்ததாகவும் இளைஞர் ஒருவர் உரையாற்றும் போது தெரிவித்தார்.

வாக்கு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமை. வாக்கு கேட்டு வருபவர்கள் எப்படி பகிரங்கமாக கேட்டு வருகிறார்களோ அதேபோல அதனை வழங்குபவர்களும் பகிரங்கமாகவே அதனை வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.

வாக்களிப்பு இரகசியமாக இடம்பெறுவது ஜனநாயகம். ஆனால், வாக்களிப்பவர் தான் யாருக்கு வாக்களிக்கிறார் என்பதை வெளிப்படுத்தி அவர்களிடம் சேவையைப் பெற்றுக் கொள்வது மக்களது உரிமை.

அதில் தலைமறைவு அவசியமில்லை. நீங்கள் தெரிவு செய்யாதபோதும் பட்டியல் மூலம் ஒருவரை தெரிவு செய்து உங்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தந்துள்ளோம்.

அதுவே நாங்கள் உங்களுக்கு செய்திருக்கும் பெரும் உதவி அதன் பயனையே இன்று நீங்கள் அனுபவிக்கின்றீர்கள். அவர் உங்களோடு களத்தில் நிற்கிறார். எங்களை அழைத்து வருகிறார்.

உங்களுக்கு தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை எமக்கு சுட்டிக்காட்டுகின்றார். எமது கோட்டைகளில் அடிமைகளாக வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை.

கிராமங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே எமது விருப்பம். அந்த பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers