விடுதலைப் புலிகளின் தடையை நீக்க கோரி ஜனநாயக போராளிகள் கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

மாறி வருகின்ற தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பிலான ஐனநாயக போராளிகள் கட்சிக்கும் அமெரிக்காவின் வெளிவிவகார செனட் பிரதிநிதிகளுக்குமிடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் ஏப்ரல் 21 தாக்குதல்கள், தெற்கின் சமகால அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்புப் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுகள் சம்பந்தமான ஜனநாயகப் போராளிகளின் நிலைப்பாடு தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்புப் பொறிமுறைகளில் தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்களை அமெரிக்கத் தூதுக்குழுவிடம் ஜனநாயகப் போராளிகள் எடுத்துரைத்துள்ளனர்.

அமெரிக்க மற்றும் இந்தியாவின் இடையீட்டு முயற்சிகளூடாக கொண்டு வரப்படுகின்ற 13 திருத்தச்சட்ட ஏற்பாடுகளின் நடைமுறைகள் புரையோடிப்போயிருக்கின்ற தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொள்ளும் ஓர் திருப்புமுனைக்கு தாம் வந்துள்ளதாக ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன் தமிழர் அரசியலில் நிலவும் வேற்றுமைகளும், இடர்பாடுகளும் தீர்வு முயற்சிகளில் தமிழர் தரப்பின் வகிபாகத்தை சீர்குலைக்கும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

தாயகப் பிரதேசங்களில் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கும் போராளிகளின் நிலைப்பாடுகளுக்கு செவிமடுத்து, அமெரிக்காவின் நலன்களுக்கெதிரான செயற்பாடுகளில் புலிகள் ஒருபோதும் குறுக்கிடாமையையும் கவனத்திற்கொண்டு ஜனநாயக வழிமுறைகள் மூலமான தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள இலங்கையில் விடுதலைப்புலிகள் கொண்டுள்ள கடப்பாட்டிற்கு மதிப்பளித்து, போராளிகள் அனைவருக்கும் ஜனநாயக விழுமியங்களின் பால் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்காவினால் விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குமாறும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழரின் நியாயப்பாடான அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாக தமிழர் தரப்பின் அனைத்து அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் ஜனநாயகப் போராளிகளின் முயற்சிக்கு அமெரிக்காவின் இராஜரீக ஆதரவும் கோரப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் முக்கியத்துவம் சம்பந்தமாக கூறிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் குழுவின் சிரேஷ்ட துறைசார் அலுவலர் டேமியன் மெர்பி இந்தச் சந்திப்பு தமிழர் அரசியற் பரப்பை மேலும் புரிந்துகொள்ளக் கிடைத்த இராஜரீக வாய்ப்பு என சுட்டிக்காட்டியுள்ளார்.