மக்களுடைய காணிகளை படையினர் வைத்திருப்பது அநீதி: மாவை சேனாதிராஜா

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

வலிகாமம் வடக்கு பிரதேசம் போர் காலத்திலும் போருக்கு பின்னரும் இராணுவத்தின் ஆளுகைக்குள்ளேயே இருக்கின்றது. போர் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னரும் கூட மக்களின் நிலம் மக்களிடம் பூரணமாக வழங்கப்படவில்லை. இது மாபெரும் அநீதியாகும்.

மேற்கண்டவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் இன்று தொடக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

போர் காலத்திலும் சரி, போருக்கு பின்னரும் சரி வலி வடக்கு பகுதி படையினரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருக்கின்றது.

இப்போதும் சுற்றுலா அதிகார சபை என்றும், படையினருக்கான காணி என்றும் அடையாளப்படுத்தப்பட்டு மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

ஆனாலும் 75 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றமையையும் நான் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனால் அது போதுமானதாக இல்லை. மிகுதி காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தற்போது காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி துறைமுகம் ஆகியன புனரமைப்பு செய்யப்படுகின்றன.

அந்த புனரமைப்பு பணிகள் நிறைவடையவுள்ளது. இருந்தும் அந்த பகுதிகளில் உள்ள மக்களுடைய காணிகள் பூரணமாக விடுவிக்கப்படவில்லை.

அந்த பகுதிகளில் உள்ள மக்களுடைய காணிகள் பூரணமாக மக்களிடம் கொடுக்க வேண்டும் என நாங்கள் உறுதியாக கேட்கிறோம்.

அதேபோல் காங்கேசன்துறை- பருத்துறை வீதி, தெல்லிப்பளை- அச்சுவேலி வீதி ஆகியன இன்றளவும் திறக்கப்படாமல் இருக்கின்றது. அவை திறக்கப்பட வேண்டும்.

அதன் ஊடாக விடுவிக்கப்படும் பகுதிகளில் மக்கள் மிக சுலபமாக மீள்குடியேற அது வழிசமைக்கும். ஆகவே மக்களுடைய நிலம் மக்களிடம் மீள வழங்கப்பட வேண்டும். போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்திருக்கின்றது.

30 வருடங்கள் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இதற்கு பின்னரும் மக்களுடைய காணிகளை படையினர் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருப்பது மிகப்பெரும் அநீதியாகவே அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers