வவுனியாவில் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த போஷாக்கு உணவில் இறந்த பல்லி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போஷாக்கு உணவில் இறந்த பல்லி காணப்பட்டதையடுத்து உணவு விநியோகஸ்தரை வவுனியா நீதிவான் நீதிமன்றால் இன்று 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான போஷாக்கு உணவினை வழங்கும் பொறுப்பு ஒப்பந்த அடிப்படையில் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று இன்றும் போஷாக்கான உணவினை வழங்க குறித்த நபர் வருகை தந்த போது பாடசாலையின் உணவு கண்காணிப்பு குழு குறித்த உணவினை பரிசோதித்துள்ளனர். இதன்போது உணவின் மேல் இறந்த பல்லி ஒன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை உணவு கண்காணிப்பு குழு பாடசாலை அதிபரின் கவனத்திற்கு சென்றதுடன், பொது சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு வருகை தந்த பொது சுகாதார பரிசோதகர் உணவினை பார்வையிட்டதுடன், பல்லி இறந்து காணப்பட்டமை தொடர்பில் உணவு விநியோகஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கினை விசாரித்த வவுனியா நீதிமன்ற நீதவான் குறித்த உணவு விநியோகஸ்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.