ஞாயிற்றுக்கிழமை கண்டியில் முஸ்லிம் கடைகள் மூடப்பட்டிருக்கும்

Report Print Kamel Kamel in சமூகம்

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கண்டியில் முஸ்லிம் கடைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரின் கோரிக்கைக்கு அமைய பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகள் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பௌத்த பிக்குகள் அதிகளவில் திரள உள்ள காரணத்தினால் ஏதேனும் முரண்பாடுகள் வெடிப்பதனை தடுக்கும் நோக்கில், முஸ்லிம் வர்த்தகர்கள் ஞாயிற்றுக் கிழமை தங்களது கடைகளை திறக்காமல் இருக்கத் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கண்டிக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கோரியுள்ளது.

இதேவேளை, நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு ஞாயிற்றுக்கிழமை முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

பௌத்த பிக்குகள் கூடி தீர்மானம் எடுப்பதற்கு தடை ஏற்படுத்தும் வகையில், அகில இலங்கை ஜம்மஇயத்துல் உலமா சபை உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் தரப்புக்களும் முயற்சிப்பதாக பொதுபலசேனா கடிதம் ஒன்றை பொலிஸாருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.