மகிந்தவை போன்றே மைத்திரியும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார்

Report Print Kumar in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றினாரோ அதே போன்று மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்காமல் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை - ஆலையடிவேம்பில் தனது அலுவலகத்தில் எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்..இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கில் முஸ்லிம்களினால் தமிழ் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அந்த பாதிப்பு வடக்கில் மிகவும் குறைவான நிலையிலேயெ காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வந்த போதிலும், ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தினை வழங்க முனைந்த போதிலும் பின்னர் சிங்கள பேரினவாதிகளின் கருத்துகளுக்கு உள்ளீர்க்கப்பட்டு அதற்கு எதிராக செயற்படுகின்றனர்.

எந்த பேரினவாத கட்சியாக இருந்தாலும் சிறுபான்மை மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு தவறியே வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கான தீர்வொன்றினை வழங்ககூடிய கட்சியொன்றின் தேவையினையே தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

வடகிழக்கு இணைந்த தீர்வுத்திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக பயணித்துக்கொண்டிருக்கும் போதும் கிழக்கில் தமிழ் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம் மக்களுடன் பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது.ஆனால் முஸ்லிம் கட்சிகள்,முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழர்களை பிரித்து பார்க்கின்றவர்களாக, தமிழர்களுக்கான அடிப்படை உரிமையை வழங்குவதில் இருந்து தவறவிடுபவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தரமுயர்த்தும் செயற்பாடுகளை செய்யமுடியும்.

மகிந்தவின் கட்சியோ,பிள்ளையான்,கருணா போன்றவர்களாலோ,கிழக்கு தமிழர் ஒன்றியமோ,பொதுபலசேனவினாலையோ கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் எந்தவித முன்னேற்றத்தினையும் செய்யமுடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மட்டுமே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்திக்கொடுக்க முடியும்.இன்னும் ஓரிரு மாதங்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers