முன்னாள் போராளிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கூடிய கவனம் செலுத்த வேண்டும்

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

முன்னாள் போராளிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கூடிய கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் போராளிகள் கட்டமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் தலைமைக் காரியாலயத்தின் மூலமாக விசாரணைக்கான அழைப்பாணை விடுக்கப்பட்டதையடுத்து இன்று காரைதீவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முதலில் இன்றைய நன்நாளில் ஈழ விடுதலை போராட்டத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், முதற்கரும்புலியாக வீரச்சாவடைந்தவர்களுக்கும் ஒரு நிமிட மௌன இறை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

யுத்தம் நிறைவுற்று 10 வருடங்கள் கழிந்த நிலையில் முன்னாள் போராளிகளின் நிலை இன்னும் கவலைக்குறியதாகவே மாறியுள்ளது.

காரணம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த போராளிகள் அந்த தருணத்தில் கூட பல துயரங்களை அனுபவித்துள்ளனர். அந்தவகையில் அவர்கள் இப்போதும் அவ்வாறான துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

குறிப்பான முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பத்தினர் பலர் அரச படையினரினாலும், இராணுவ புலனாய்வாளர்களினாலும் பின் தொடரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அது மட்டும் அல்லாது அவர்களுக்கான வாழ்வாதாரங்களும் சரியான முறையில் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.

தற்போது எதிர்வரும் 08ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரினால் 02 ஆம் மாடிக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

எமது முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது? தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 41வது ஐக்கிய நாடுகள் சபை அமர்வின் இலங்கை அரசாங்கத்தின் செயல்கள் யுத்தக்குற்றங்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரங்கள் என்பன பற்றி மிகத்தெளிவாக விசாரிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமல்லாமல் முன்னாள் போராளிகளாகிய நாம் ஜனநாயக வழியில் எமது உரிமைகளுக்காக வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால் அவ்வாறு உள்ள சந்தர்ப்பங்களிலும் இந்த அரச புலனாய்வு அதிகாரிகள் மூலமான விசாரணைகள் மற்றும் கெடுபிடிகளினால் நாம் வாழ்வதற்கே அஞ்சுகின்றோம்.

எனவே எமது வாழ்க்கையிலும், முன்னாள் போராளிகளின் பாதுகாப்பிலும் இந்த அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபை கூடிய கவனம் செலுத்த வேண்டுமென இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.