அக்மீமன துப்பாக்கி சூட்டு சம்பவம்! இராணுவ வீரரை தடுத்து வைக்க உத்தரவு

Report Print Murali Murali in சமூகம்

மாத்தறை அக்மீமன உபநந்த கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரை காலி மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை பூஸ்ஸ 551வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பில் அவசர நிலைமைகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும், சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறும் வரையில் சந்தேக நபரை, விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக உடனடியாக சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறுமாறும் நீதிமன்றம் அக்மீமன பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதேவேளை, மாத்தறை அக்மீமன பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த சந்தேக நபர் மீது இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சம்பவத்தில் 39 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.