யாழில் கணவனின் கொடூர செயல் - இளம் தாய் பரிதாபமாக மரணம் - உயிரை காக்க போராடிய மகன்

Report Print Tamilini in சமூகம்

யாழ்ப்பாணத்தில் கணவனின் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் தாய் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை ஐயனார் கோவில் அராலி கிழக்கை சேர்ந்த 32 வயதான சண்முகநாதன் அருகு என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.

கணவனால் தீ வைக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து யாழ். போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 30ம் திகதி இரவு குறித்த பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இதனால் ஏற்பட்ட கடும் கோபம் காரணமாக மனைவி மீது மண்ணெண்ணை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்.

இதை பார்த்த 14 வயதுடைய மகன் தாயை கட்டியணைத்து தீயை அணைக்க முற்பட்டுள்ளார். எனினும், மகனையும் தாக்கிய தந்தை, தீயை அணைக்க விடாமல் தடுத்துள்ளார் .

தகப்பனின் கையை கடித்துவிட்டு, மகன் தீயை அணைத்து அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

எனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார்.