தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - காந்தி பூங்காவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், அண்மையில் சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிக்கு நீதிகோரியும் தமிழ் மக்கள் நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அரசியல் கைதி சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கு, தமிழ் மக்களை அடக்காதே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

தமிழ் மக்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்த உறுதிமொழிகளை செயற்படுத்தாமல் இழுத்தடிப்புகளை செய்துவருவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலைக்கு முறையான அழுத்தங்களை வழங்கவில்லையெனவும் இதன்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் சிறைச்சாலையில் மரணமான தமிழ் அரசியல் கைதியான சகாதேவனின் மரணத்தில் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரியானமுறையில் சர்வதேசத்தின் உதவியுடன் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன் அடிகளார், தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.