இரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ள அலுகோசுக்கள் - சிறைச்சாலையில் காணப்படும் தயார் நிலைகள்

Report Print Steephen Steephen in சமூகம்

எந்த நேரத்திலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தயார் நிலைகள் காணப்படுவதாகவும் சிறைச்சாலை அதற்கு தயாராகி வருவதை காண முடிவதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூக்கிலிடப்பட உள்ள நான்கு பேருக்கு தேவையான சிறைச்சாலை உடைகள், கயிறு உட்பட தேவையான பொருட்கள் வெலிகடை சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவரது பொறுப்பில் அலுவலக அறையொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை புதிதாக பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள அலுகோசுகள் யார் என்பதை எவரும் அறிந்துக்கொள்ளாத வகையில், அவர்கள் இரகசியமான இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடையாளம் தெரிய கூடாது என்பதற்காக இவர்கள், ஏனைய அதிகாரிகளிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். இரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு அலுகோசுகள் சிறைச்சாலையில் இருந்து வெளியில் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அலுகோசுக்கள் வெலிகடை சிறைச்சாலையில் உள்ள பயிற்சி பிரிவின் விசேட அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதிய நேரத்தில் இவர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளரின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தூக்கிலிடப்பட உள்ள நான்கு பேரின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது சம்பந்தமான நிலைமைகள் மற்றும் சிறைச்சாலையின் நிரந்த உத்தரவு தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு இடைக்கால தடைவிதித்து உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.