பாதிக்கப்படும் சாதாரண மக்கள்! பயமில்லாமல் தகவல் தருமாறு கோரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

இஞ்சம் வாங்குவதை மாத்திரம் இந்த சமூகம் குற்றமாக கருதும் போதிலும் இலஞ்சம் கொடுப்பதும் பாரதூரமான குற்றமே என சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சரத்துக்களை ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான அமைப்பு (கபே) என்பன இணைவில் தேசிய மட்டத்தில் இலஞ்சம் பற்றிய சரத்துக்களை ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஐந்தாண்டு செயற்றிட்டம் தொடர்பாக தெளிவூட்டும் கருத்தரங்கு இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.

கபே அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏஸ்.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

லஞ்சமும், ஊழலும் நாட்டில் பெருகியுள்ளதாலே அரசுக்கு செல்லவேண்டிய வரி ஒரு சில தனிநபருக்கு செல்வதால் மக்கள் மீது வரிச்சுமை ஏற்படுகின்றது.

அத்துடன் பொருட்களின் விலையேற்றமும் ஏற்படுகிறது. ஊழல் லஞ்சம் என்பவற்றால் முறையற்ற விதத்தில் சொத்து சேர்க்க முற்படுகையில் சாதாரண பொதுமக்களே பாதிப்புறுகின்றனர்.

நாட்டில் லஞ்சம் கொடுத்து முறையற்ற விதத்தில் கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும் போதே இடிந்த சம்பவங்கள் நாட்டிலே நடைபெற்றிருக்கின்றன.

இலஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதன் மூலமே நாட்டை முன்னேற்றுப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.

நாட்டில் இலஞ்சமும், ஊழலும் தொடர்ந்தும் அதிகரிக்குமானால் தேசிய வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும்.

இலங்கை போன்ற நாடு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே அன்று தொடக்கம் இற்றை வரை காணப்பட்டு வருகிறது.

இலஞ்சம் எடுப்பதும், கொடுப்பதும், இடைத்தரகர்களாக செயற்படுவதும் பாரிய குற்றமாக கருதப்படுகிறது. இலங்கை போன்ற நாட்டில் இலஞ்சம் குறைந்தபாடில்லை. அதிகரித்தே வருகிறது.

இதனால் வெளிநாடுகளில் வட்டியுடன் கடன் பெற்று நாட்டை நடத்தக்கூடியதாகவுள்ளது. நாடு பின்தங்கி அபிவிருத்தியை கண்டு கொள்ளாமல் காணப்படுகிறது. சோமாலியா போன்ற நாடுகளில் வறுமைக்கு அங்கு இலஞ்சம் அதிகரித்தமையும் ஒரு காரணமாகும்.

பொது மக்களாகிய நீங்கள் பயமில்லாமல் இலஞ்ச, ஊழல் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு அறியத்தாருங்கள்.

அவசர இலக்கம் 1954 ஊடாகவும், எழுத்து மூலமாகவும் அரச அதிகாரிகளுக்கு எதிராக தங்களது முறைப்பாடுகளை பயமின்றி முன்வையுங்கள் என தெரிவித்துள்ளார்.