மிருகங்களின் சரணாலயமாக மாறும் வாழைச்சேனை கடதாசி ஆலை

Report Print Navoj in சமூகம்

மூவின மக்களையும் தரம் உயர்த்திய பெருமையைக் கொண்ட வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை தற்போது அதனை உயர்த்திட முடியாத நிலையில் உள்ளதால் ஆலையின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையினை புனரமைக்கும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இன இளைஞர் மற்றும் யுவதிகளின் வேலையில்லா பிரச்சினையை முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

ஆனால் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையினை எந்த அரசாங்க காலத்தில் இயங்க வைக்கப்படும் என்ற ஏக்கம் இளைஞர்கள் முதல் முன்னாள் ஊழியர்களின் மனதில் புரியாத புதிராக கேள்வியுடன் உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

ஆலையை பார்வையிட வருகை தரும் அரசியல் பிரதிநிதிகள் ஒவ்வொரு வார்த்தைகளை மக்களுக்கு வழங்கி விட்டு செல்கின்றனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை. பிரதமர் அனுமதி வழங்கினால் ஆலையை இயக்குவதாகவும், கொரியா நாட்டின் முதலீட்டாளர்களின் முதலீடு மூலம் இயங்கச் செய்ய உள்ளதாகவும் அரசியல் பிரதிநிதிகள் கூறுகின்றனர். ஆனால் பல வருடங்கள் கடந்து கொண்டே செல்கின்றன.

ஆலைக்கு சொந்தமான பிள்ளையார் ஆலயம் தற்போது மந்தகதியில் முன்னாள் ஊழியர்களின் நிதிப்பங்களிப்பில் இயங்க வருகின்றது. இவ்வாலைக்கு வரும் பிரதிநிதிகள் ஆலயத்திற்கு வருகை தந்து பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஆலைக்கு செல்கின்றனர்.

ஆனால் ஆலயத்தையும், கடதாசி ஆலையையும் மறந்து விடுகின்றனர். வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை புனரமைக்கப்படுமோ அல்லது அரசியல் நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றும் சதி நடவடிக்கையாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்னாள் ஊழியர்கள், இளைஞர் யுவதிகள் மத்தியில் எழுந்துள்ளது.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை புனரமைக்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் பிரதிநிதிகள் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து இளைஞர் யுவதிகளின் வேலையில்லா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைய வேண்டும் என பலரது கோரிக்கையாக உள்ளது.

எனவே, ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு பக்க துணையாக இருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து ஒருமித்த கோரிக்கையினை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Latest Offers