கற்பாறைக்குள் படகுடன் சிக்கி தவித்த பயணிகளை இரவோடிரவாக மீட்டெடுத்த மக்கள்

Report Print Theesan in சமூகம்

யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையிலிருந்து அனலைதீவுக்கு பயணித்த பயணிகள் படகு ஒன்று கற்பாறையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அதனை எழுவைதீவைச் சேர்ந்த மக்கள் நேற்று மாலை மீட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்றுறைக்கும் அனலைதீவுக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையில் ஈடுபடும் படகு ஒன்று நேற்று மாலை அனலைதீவில் இருந்து ஊர்காவற்றுறைக்கு மக்களை ஏற்றிவந்து இறக்கிவிட்டு திரும்பிச் சென்றுள்ளது.

அதன்போது அந்தப் படகில் எட்டுப் பயணிகளும் அனலைதீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

படகு பயணித்து கொண்டிருந்த போது படகின் இயந்திரத்தின் புறொப்புளர் பகுதியில் படகில் காணப்பட்ட கயிறு சிக்கி கொண்டதால் படகு பயணிக்க முடியாது நடுக்கடலில் தத்தளித்து காற்றில் நகர்ந்து கற்பாறையாக காணப்படும் பகுதி ஒன்றில் சிக்கியிருந்தது.

சம்பவத்தை அடுத்து படகினை மீட்டு தருமாறு ஊர்காவற்றுறை பிரதேச செயலகர் ஊடாக கடற்படையினரிடம் உதவி கோரப்பட்டிருந்தது. படகு சிக்கியிருந்த பகுதிக்கு செல்ல முடியாது என கடற்படையினர் கைவிரித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் எழுவைதீவு மக்கள் மனிதாபிமான அடிப்படையில் படகு ஒன்றில் துணிந்து இறங்கி படகில் பயணித்த மக்களையும் படகினையும் பத்திரமாக மீட்டு ஊர்காவற்றுறை இறங்குதுறைப்பகுதிக்கு கொண்டு சேர்த்திருந்தனர்.

மாலை 5.30 இற்கு பயணித்த படகும் பயணிகளும் பலத்த காற்றின் மத்தியில் இரவு 11.30 மணியளவிலேயே மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறைக்கு சேர்க்கப்பட்டனர்.

அவ்வாறு கண்ணகி அம்மன் துறைமுகப்பகுதிக்கு கொண்டு சேர்க்கப்பட்ட மக்களை கடற்படையினர் தமது படகு மூலம் அனலைதீவுக்கு ஏற்றிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers