விடுதைலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போதே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான க.துளசி சர்வதேச ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

மாறிவரும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், தென் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் காய்நகர்த்தல்கள், தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்பு பொறிமுறைகளில் தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்கள் குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக க.துளசி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் குறுக்கிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், இந்த விடயத்தை கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers