திருகோணமலை மாவட்டத்தில் குடிநீரின்றி 8113 பேர் பாதிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக குடிநீரின்றி 8113 பேர் இன்று வரை பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவிப் பணிப்பாளர் கே.சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆறு பிரதேசங்கள் அதிகளவில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிண்ணியா பிரதேச செயலகத்தில் அதிகளவிலான மக்கள் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிண்ணியா பிரதேசத்தில் 903 குடும்பங்களும், வெருகல் பிரதேசத்தில் 152 குடும்பங்களும், தம்பலகாமம் பிரதேசத்தில் 102 குடும்பங்களும், குச்சவெளி பிரதேசத்தில் 467 குடும்பங்களும், கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் 664 குடும்பங்களும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 169 குடும்பங்களும் மொத்தமாக 8113 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் இவர்களுக்கான சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், வறட்சியினால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் இன்றி யாராவது பாதிக்கப்பட்டால் பிரதேச செயலகத்துக்கு அறிவிக்குமாரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.