2020ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள இடமாற்றம் தொடர்பான புதிய சுற்றறிக்கை

Report Print Mubarak in சமூகம்

கிழக்கு மாகாண அரச சேவையில் சேவையாற்றி வரும் இலங்கை அதிபர் சேவை உத்தியோகத்தர்களுக்கு 2020ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள இடமாற்றம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்றினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முதுபண்டாவினால் அந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண அரச சேவையில் சேவையாற்றி வரும் இலங்கை அதிபர் சேவையில் உள்ள சகல உத்தியோகத்தர்களும் வருடாந்த இடமாற்றத்துக்கு கட்டுப்பட்டவர்களாவர்.

இந்த இடமாற்றமானது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

இலங்கை அதிபர் சேவை சேர்ந்த ஒரு உத்தியோகத்தர் ஏதேனும் ஒரு பாடசாலையில் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் சேவையாற்றி இருப்பின் அது வருடாந்த இடமாற்ற தகைமையாக கருதப்படும்.

ஒரு பாடசாலையில் தொடர்ச்சியாக 8 வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ள சகல இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் வருடாந்த இடமாற்றத்திற்கு உட்பட்டவர்களாவர்.

53 வயதுக்கு மேற்பட்ட இலங்கை அதிபர் சேவை சேர்ந்த உத்தியோகத்தர்கள் அவர்களது கோரிக்கை இல்லாமல் வலயத்துக்குள் வெளியில் இடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள்.

அதேபோன்று 58 வயதுக்கு மேற்பட்ட இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை அவர்களது கோரிக்கை இல்லாமல் வலயத்துக்குள்ளும் கூட இடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள்.

வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களை வலயக்கல்விப் பணிப்பாளர் ஊடாக 2019 ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

இடமாற்ற விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற பின் இடமாற்ற பெயர் பட்டியல் 2019 செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். இதன் பின்னர் மேன்முறையீடு செய்வதற்காக 2019 செப்டம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும்.

மேன்முறையீடு பரிசீலனைக்குப் பின்னர் வருடாந்த இடமாற்ற கட்டளைகள் 2019 நவம்பர் 1ஆம் திகதிக்கு முன்பாக வெளியிடப்படும் இதன் பின்னர் வருடாந்த இடமாற்ற கட்டளைகள் 2020 ஜனவரி 01ஆம் திகதி அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Latest Offers