நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசியல்வாதிகள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்

Report Print Suman Suman in சமூகம்

எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எமது அரசியல்வாதிகள் எதிர்த்து வாக்களித்து அரசுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது அரசியல் தலைமைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இதய திருப்தியுடன் செயற்படவில்லை. வெளிநாடுகளிற்கு செல்கின்றனர், பிரதிநிதிகளாக ஜெனிவாவிற்கு செல்கின்றனர்.

நாடாளுமன்ற அமர்வுகளில் தவறாது கலந்துகொள்கின்றனர். ஆனால் எமது பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் பேசியதாக தெரியவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பில் அக்கறையற்றவர்களாகவும், மறந்தவர்களாகவும் எமது அரசியல் தலைமைகள் செயற்படுகின்றன.

இந்த நிலையில் தமிழ் மக்களின் நலனுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்காகவும் வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்து அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடயங்களை மறந்து இன்று கம்பெரலியவிற்கும், சமுர்த்தி உள்ளிட்ட அபிவிருத்திகளிற்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதை நாம் காண்கின்றோம். எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசுவார்கள் என எதிர்பார்த்த அவர்கள் இன்று அவற்றை மறந்து செயற்படுகின்றனர்.

தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயற்படவும், எமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் விடயத்தில் அக்கறையாக செயற்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இவ் ஊடக சந்திப்பில் அழைப்ப விடுத்திருந்தனர்.

Latest Offers