உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார் ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார்

Report Print Sumi in சமூகம்

10ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது ஆண்டு விழாவும், சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் 50ஆவது ஆண்டுப் பொன் விழாவும் சிக்காகோவில் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

சிக்காகோ மாநிலத்தில் உள்ள இலிநொயிஸ் என்ற நகரத்தில் ஜூலை 04ஆம் திகதி முதல் ஜூலை 07ஆம் திகதி வரை இம்மாநாடுகள் இடம்பெற்றிருந்தன.

இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளாரின் பத்திரிகைப்பணி வழி, தமிழ்ப்பணி எனும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார் ஜூலை 07ஆம் திகதி சமர்ப்பித்தார்.

ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார் யாழ்.மறைமாவட்டத்தை சேர்ந்த இலங்கை திறந்த பல்கலைகழக ஊடக வருகை விரிவுரையாளர் ஆவார்.

மன்னார் மறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் நேசன் அடிகளார், யாழ்ப்பாணத்தை சேர்ந்த வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், யாழ்.பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் புஸ்பரட்ணம் ஆகியோர் 10ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்துள்ளனர்.

ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரினால் சமர்பிக்கப்பட்ட தனிநாயகம் அடிகளாரின் பத்திரிகைப்பணி வழி, தமிழ்ப்பணி எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரை, என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்ற திருமூலரின் வார்த்தைகளைத் தன்னுடைய விருதுவாக்காக்கி பணியாற்றிய தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப்பணி இன்று வரை பலகோணங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தனிநாயகம் அடிகளாரின் பிறப்பின் நூற்றாண்டு நிறைவில் (1913-2013) பன்முக ஆளுமை கொண்ட இந்த மாமனிதனின் வாழ்வும் பணியும், தமிழ்கூறும் நல்லுலகெங்கும் இன்னும் சிறப்பாக தமிழர் வாழும் பூமி எங்கும் பன்முகப்பார்வை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.

இருப்பினும், தனிநாயகம் அடிகளார் பத்திரிகைப்பணியை எவ்வாறு தம் தமிழ்ப்பணிக்கு மிக நீண்ட காலத்தின் முன்னரே பயன்படுத்தினார் என்பது பற்றிய ஆய்வுப்பரப்பு பெரிதும் ஆய்வு செய்யப்படாத ஒரு பரப்பாகவே உள்ளது.

தனிநாயகம் அடிகளாரின் பத்திரிகைப்பணி, வழி தமிழ்ப்பணி என்ற இந்த ஆய்வு தனிநாயகம் அடிகளார் எவ்வாறு தம் தமிழ்ப்பணிக்கு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைத்துறைகளை பயன்படுத்தினார் என்பதையும் அதனால் என்ன சாதித்தார் என்பதையும் பற்றி ஆய்வு செய்வதாக அமைந்துள்ளது.

15ஆம் வயதில் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொட்டில் சண்சைன் என்ற ஆங்கில மாத இதழில் ஆசிரியப்பணி புரிந்த அனுபவம் கிறிஸ்தவ மிசனரிமார் தம் சமயப்பணிக்கு பத்திரிகைத்துறையை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டனர் என்ற அறிவு - தமிழ் மொழியின் சிறப்பை ஆங்கில மொழியில் வெளியிட்டால் தான் வெளிநாட்டவர் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்வர் என்ற தெளிவு என்பவற்றை பின்புலமாக வைத்து தமிழ் கலாச்சாரம் (1952) மற்றும் ஜேணல் ஒப் தமிழ் ஸ்ரடீஸ் (Journal of the studies 1968) என்ற இரண்டு ஆங்கில இதழ்களை வெளியிடப்பட்டது.

அதன் வழி 1966இல் மலேசியாவில் முதல் உலக தமிழாராய்ச்சி மாநாட்டையும் தொடர்ந்து முறையே 1968இல் சென்னை, 1970இல் பரிஸ், 1974இல் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நான்கு தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தி அதன் தொடராக 2019ஆம் ஆண்டு 10ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிக்காகோ மாநகரில் நடைபெற அடியிட்டவர் இலங்கை தமிழ் கத்தோலிக்க குருவானவர் தனிநாயகம் அடிகளார்.

தனிநாயகம் அடிகளார் 67 ஆண்டுகள் (1913 - 1980) மாத்திரமே இவ்வுலகில் வாழ்ந்தார். இந்த 67 ஆண்டு காலப்பகுதியில் அவர் யாழ்.மறைமாவட்டத்தில் வளலாய் என்னும் இடத்தில் உள்ள யாழ்.ஆயருக்குச் சொந்தமான விடுமுறை இல்லத்தில் இளைப்பாறும் வரை தம் தமிழ்ப் பணிக்கு பத்திரிகைப் பணியை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தி ஊடகத்தை நுட்பமாக கையாண்டதாலேயே அவரின் தழிழ்ப்பணி முழு வெற்றி கண்டது என தனிநாயகம் அடிகளாரின் பத்திரிகைப்பணி வழி தமிழ்ப்பணி என்ற ஆய்வுக் கட்டுரை நகர்ந்து செல்கிறது.

Latest Offers

loading...