கல்முனைக்கு வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு வெறுங்கையோடு வந்த கணக்காளர்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான அலரிமாளிகைச் சந்திப்பின் பிரகாரம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு புதிதாக ஒரு கணக்காளர் வருகை தந்துள்ளார்.

அலரிமாளிகைச் சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றிருந்ததுடன் இன்று காலை 9 மணியளவில் புதிய கணக்காளர் வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து வருகைதந்த அவரிடம் முறைப்படி எந்தவொரு எழுத்துமூல ஆவணமும் இருக்கவில்லை.

அவர் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் எ.ஜே.அதிசயராஜ்ஜூடன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அம்பாறை அரச அதிபரின் கட்டளைக்கிணங்க தான் இங்கு வருகை தந்துள்ளதாக கணக்காளர் கூறியுள்ளார்.

பெரும்பாண்மையினத்தைச் சேர்ந்த எஸ்.சாணக என்ற அந்தக் கணக்காளரிடம் முறையான நியமனக் கடிதமோ, இடமாற்றக் கட்டளைக் கடிதமோ இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், அவர் பதவியை பொறுப்பேற்கவோ அல்லது வரவுப்பதிவேட்டில் ஒப்பமிடவோ இல்லை. புதிய கணக்காளர் வருகை தரும்போது உண்ணாவிரதமிருந்த சிவஸ்ரீ சச்சிதானந்த சிவக்குருக்களும், மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனும் சமூகமளித்திருந்தனர்.

அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு சாதகமாகச் செயற்பட வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முன்முயற்சியா? அல்லது வாக்கெடுப்புவரை நடைபெறும் கண்துடைப்பு நாடகமா? என்று தெரியாமலிருப்பதாக பொதுமக்கள் சந்தேகத்துடன் கருத்துரைத்துள்ளனர்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் அணி துணைச் செயலாளர் அ.நிதாஞ்சன் இன்று 12 மணியளவில் கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இதுபற்றி எடுத்துக்கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கை எடுப்பதாக சுமந்திரன் கூறியதாக நிதாஞ்சன் தெரிவித்துள்ளார்.

அலறிமாளிகைச்சந்திப்பின் பிரகாரம் தங்கள் பிரதேச செயலகத்திற்கு புதிதாக ஒரு கணக்காளர் நியமிக்கப்படவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தனவே என வினவிய போது, எமது பிரதேச செயலகத்திற்கு இன்னும் கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்று கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் எ.ஜே.அதிசயராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers