இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் குறைவு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக பல்வேறு வகையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், தொடரும் அதிக வெப்பம் வறட்சி காரணமாக குளங்களின் நீர்மட்டம் என்றுமில்லாதவாறு குறைவடைந்து வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாரிய மற்றும் நடுத்தரகுளங்களின் கீழ் தீர்மானிக்கப்பட்ட அளவுகளில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப நீர்விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு நீர் ஆவியாதலின் தன்மை அதிகமாக காணப்படுவதனால் குளத்தின் நீர்மட்டம் குறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்ட நீர்பபாசனத் திணைக்களத்தின் இன்றைய தகவலின் படி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 17அடி 08 அங்குலமாகவும் அக்கராயன்குளம் 09 அடியாகவும் கல்மடுக்குளம் 10அடி 03 அங்குலமாகவும் புதுமுறிப்பக்குளம் 09அடி 02அங்குலமாகவும் கரியாலை நாகபடுவான் குளம் 01 அடி 09 அங்குலமாகவும் வன்னேரிக்குளம் 04அடியாகவும் கனகாம்பிகைக்குளம் 04 அடி 02 அங்குலமாகவும் பிரமந்தனாறு குளம் 06 அடி 07 அங்குலமாகவும் குடமுருட்டிக்குளம் 04அடி 02 அங்குலமாகவும் காணப்படுகின்றது என மாவட்டப்பிரதி நீர்ப்பாசனப்பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.