பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை: நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமீலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் இன்று குறித்தநபரை ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொரவெவ - ரொட்டவெவ பகுதியில் பல நாட்களாக ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேகநபரின் வீட்டினை பொலிஸார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட நபர், ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜுனைதீன் சறூக் என்று அழைக்கப்படும் நஸ்லிம் எனத் தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் கஞ்சா போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த போது மொரவெவ பொலிஸார் கைது செய்தமை தொடர்பில் ஏற்கனவே திருகோணமலை நீதிமன்றில் 15இற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், போலி நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தல் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாகவும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ரொட்டவெவ கிராமத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பள்ளி பரிபாலன சபை மற்றும் பொது அமைப்புகளின் ஊடாக ஏற்கனவே பொலிஸ் நிலையத்திற்கு பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவர் தொடர்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் இவர் தொடர்ந்தும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மொரவெவ பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து இவர் தொடர்பில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பில் கெப்பித்திகொல்லாவ நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாகவும் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.