பெருந்தோட்டங்களில் மரங்கள் வெட்டுவதில் புதிய நடைமுறை

Report Print Mubarak in சமூகம்

பெருந்தோட்டங்களில் காணப்படும் மரங்களை தோட்ட நிர்வாகங்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி தான்தோன்றிதனமாக இனி வெட்ட முடியாது. தற்போது அவை அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தபட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரவித்துள்ளார்.

அப்படி வெட்ட வேண்டுமானால் இனிவரும் காலங்களில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் அனுமதி பெற்றே வெட்ட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்டம் ஹாலிஎல ஊவஹைலண்ட்ஸ் நெலுவ தோட்டம் நெலுவ பிரிவிற்கான பாதை அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மானிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..

மேலும் கருத்தது வெளியிடுகையில்,

தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் வெட்டுவதற்காக வளர்க்கப்பட்ட மரங்களை வெட்டுவதற்கும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மரங்களை அகற்றுவதற்கும் சில பெருந்தோட்ட கம்பனிகளின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

இதனால் குறுகிய காலத்தில் இலாப நோக்கு நிறைவேற்றப்பட்டாலும் நீண்டகால சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது. சூழலையும் பாதுகாக்க வேண்டும்.

ஒரு மரத்தை வெட்டுவது என்றால் குறுப்பிட்ட அளவு மரங்கள் நாட்ட வேண்டும் இதனை யாரும் செய்வதாக தெரியவில்லை.

இந்நிலையில் இந்ந நடைமுறைகளை களத்திற்கு சென்று பரீசீலனை செய்து உறுதிப்படுத்தியதற்கு பின்னர் மரங்கள் வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும்.

மரங்கள் வெட்டப்படும் பொழுது அதன் மூலம் கிடைக்கபெறும் வருமானத்தில் குறிப்பிட்ட விகிதம் தோட்டத்தின் நலன்புரி விடயங்களுக்கு கொடுக்க வேண்டும்.

அதேபோல் வெட்டிய மரங்களை விற்பனைக்காக கொண்டு செல்லும் போது தோட்டங்களில் புதிதாக செப்பனிடப்பட்ட பாதைகள் பாதிக்கபடாமல் இருக்க வேண்டும்.

அப்படி பாதிக்கபட்டால் அதனை திருத்தி அமைப்பதற்கு ஒரு தொகை நிதியை வைப்பில் இட வேண்டும்.

அது மட்டுமல்லாது மரங்கள் வெட்டும் போதும் கொண்டு செல்லும் போதும் ஏற்படும் ஏனைய பாதிப்புகளுக்கும் பொறுப்பு கூர வேண்டும்.

தற்போது இவைகள் அனைத்தும் முறையாக நடைபெறாததினால் தோட்டங்களில் பிரச்சனைகள் தோன்றி உள்ளன.

அதனால் பொலிஸ் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகங்களும் பொலிஸ் நிலையங்களில் நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.