மடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஏற்றுகொள்வோம்

Report Print Ashik in சமூகம்

மடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் நன்றி உணர்வோடு ஏற்றுக்கொள்ளுகின்றோம் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மடு திருத்தலத்தில் அமைக்கப்படவுள்ள 252 மலசல கூடங்களை கொண்ட மலசல கூட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி மடு திருவிழாவிங்கு பிரதமர் வருகை தந்திருந்தார். அப்போது என்னிடம் கேட்டார் மடு திருத்தலத்திற்கு என்ன தேவை? என்று. அப்போது வீடுகள், மலசல கூடங்கள் உற்பட பல்வேறு தேவைகளை அவருக்கு கூறினேன்.

அந்த நேரத்திலே அவர் உடனடியாக இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா அழைத்து நான் கூறுவதை கேட்டு அதனை உடனடியாக செய்ய வேண்டும் என்ற பணிப்புரையினை விடுத்தார்.

ஆனால் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட இருந்த வீட்டுத்திட்டம் இன்னும் நடை முறைப் படுத்தப்படவில்லை. ஆனால் பிரதமர் கூறிய விடயத்திற்கு இராஜாங்க அமைச்சர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தருவது வழமை. குறிப்பாக ஆவணி திருவிழாவிற்காக சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வருவது வழமை.

அவர்களுக்கான மலசல கூடங்கள் இங்கே உள்ளமை போதுமானதாக இல்லை. மடு பரிபாலகர், அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர் உற்பட ஏனைய அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் நன்றி உணர்வோடு ஏற்றுக்கொள்ளுகின்றோம். இன்னும் அதிகமான வசதிகள் யாத்திரிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.