வவுனியா வர்த்தக நிலையத்தில் பாவனையாளர் அலுவலக அதிகார சபையினர் அடாவடி: வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில் பொருளொன்றை கொள்வனவு செய்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பணத்தை மீள் வழங்குமாறு கேட்டு அடாவடித்தனத்தில் ஈடுபட்டதாகவும் கடை ஊழியரை அச்சுறுத்தியதாகவும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வவுனியா வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் சி.சி.ரிவி கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ள ஒளிப்பதிவும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு வழமையான சோதனை நடவடிக்கைக்காக சென்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பெண் உத்தியோகத்தர் இருவர் மின் பொருளொன்றை கொள்வனவு செய்ததுடன் அதற்கான உத்தரவாதப் பத்திரத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் மீண்டும் குறித்த பொருளை கையளித்து பணத்தை திருப்பித்தருமாறு கோரியுள்ளனர்.

வர்த்தக நிறுவனத்தின் ஊழியர் பணத்தை திருப்பி கையளிக்க மறுத்ததன் காரணமாக சம்பவ இடத்திற்கு சென்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர் சிலர் குறித்த வர்த்தக நிலையத்தை சோதனை செய்ததுடன் கடையின் ஊழியரை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் மேசை மீது வைத்திருந்த பணத்தை அவர்களாகவே எடுத்துச் சென்றுள்ளதாகவும் வர்த்தக உரிமையாளர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த வர்த்தக உரிமையாளர், பொருளை பணம் கொடுத்து பெற்றுக்கொண்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர் உத்தரவாதப்பத்திரம் எழுதப்படும் போது அதனை தடுத்திருந்தால் நாம் பணத்தை மீளளித்திருக்க முடியும். ஆனால் உத்தரவாதப் பத்திரம் குறித்த பொருளுக்கு எழுதப்பட்டதன் பின்னர் அதனை விற்பனை செய்ய முடியாது இதன் காரணமாக எமக்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் தமது அடையாளத்தை கூட நிரூபிக்காமல் கடை ஊழியரை அச்சுறுத்தும் விதமாக சோதனை நடவடிக்கை என்ற பெயரில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டமையானது மிகுந்த கவலையளிக்கிறது என தெரிவித்தார்.

Latest Offers