வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு முதல் கொடுப்பனவை தவிர வேறு எந்த கொடுப்பனவும் வழங்கப்படவில்லையென பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 2613 குடும்பங்களில், 2315 குடும்பங்கள் வீட்டுத்திட்டப் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 1235 பயனாளிகளுக்கு வீட்டத்திட்டத்திற்கான முதற் கட்டக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு முதற்கட்ட கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் முதற் கொடுப்பனவை பெற்றவர்கள் தொடர்ந்தும் வீட்டினை கட்டிக் முடிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

அத்தோடு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் மாதிரி கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு வீடமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போதும், அவற்றினையும் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ரி. சுபாஸ்கரனை தொடர்பு கொண்டு வினவிய போது,

நிதியை படிப்படியாக விடுவிப்பதில் தாமதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்திலிருந்து போதுமான நிதி கிடைக்கப்பெறவில்லை.

இதனாலேயே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு கிரமமாக நிதி வழங்கப்படும்.

மேலும் இந்த நிலைமை எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகிறது. எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers