வேள்வி தடை மீதான மேன்முறையீட்டு மனுக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய உத்தரவு

Report Print Kanmani in சமூகம்

இந்து ஆலயங்களில் மிருக பலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 18ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் எதிர் மனுதாரர்களாக சட்டமா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன்று ஜூலை 10ம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் முன் வழக்கு அழைக்கப்பட்டுள்ளது. அதன்போதே ஜூலை 18ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.

யாழில் சில ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன. அவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் எனக் கோரி சைவ மகா சபையினர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ம் ஆண்டு ஏப்ரல் 2ம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு 2017ம் ஆண்டு ஒக்டோபர் 26ம் திகதி இறுதிக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கியுள்ளார்.

இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அதன் மீது உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைது செய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்படுகிறது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.

இந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தும் வேள்வியின் பண்பாட்டுத் தேவையை வலியுறுத்தியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers