பிரதேச செயலகம் தரமுயர்த்தாவிடில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்த கோரி உண்ணாவிரதமிருந்தோர் தெரிவித்துள்ளனர்.

கல்முனை சுபத்ரா ராமய விகாரையில் நேற்று மாலை 7 மணியளவில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பை வடக்கு பிரதேச உப பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயர்த்தக் கோரி கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலத்தின் முன்பாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கு மாகாண இந்துக்குருமார் அமைப்பின் தலைவர் க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள், பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியங்களின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோர் நடத்தியுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த உண்ணாவிரதிகளில் ஒருவரான சச்சிதானந்தம் சிவம் குருக்கள்,

எங்களுடைய மக்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு கிடைக்காமல் எமது நாட்டு அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள் என்றால் இது ஒரு வெட்கக் கேடான விடயம்.

கையாலாகாதவர்கள் அரசியல் மேடைகளில் ஏறி தங்களுடைய சுயலாபங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர மக்களுடைய தேவைகளை நினைக்கவில்லை.

தங்களுடைய சுய தேவைகளுக்காக மக்களை நாடிச்செல்லும் பசுத்தோல் போர்த்திய புலிகளாக வாக்குகளை பெற நடிக்கிறார்கள். அரியாசனம் ஏறிய பிறகுதான் இவர்களுடைய சுய ரூபங்கள் வெளிவருகின்றன.

சுபத்ரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தனது கருத்தில்,

தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தை வழக்கும் விதமாக ஒருபோதும் செயற்பட கூடாது.

நல்லாட்சி அரசாங்கம் இதுவரைக்கும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மைகளையும் செய்யவில்லை. தமிழ் மக்களது மனதிலிருக்கும் ஏக்கங்களையோ கவலைகளையும் கண்டுவிட்டு பாராமுகமாக இருக்கின்றார்கள் என்ற காரணம் மாத்திரம் எங்களுக்கு புரிகிறது.

தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கடந்த மூன்று தசாப்தங்களாக ஏமாற்றி ஏமாற்றி இன்று வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் சுப இலாபங்கங்களுக்காகத் தான் இருக்கிறார்களே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கில்லை.

இந்த அரசாங்கம் முற்றுமுழுதாக இன்னுமொரு சமூதாயத்திற்காக மாத்திரமே செயற்படுகின்றதே தவிர மற்றைய சமூதாயங்களின் மீது அக்கறையின்றி இருக்கின்றது.

இந்த அரசாங்கத்தின் மீது கொண்டுவருகின்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்காவிட்டால் கிழக்கு மாகாணத்திலிருக்கும் சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும் திரட்டி போராடுவோம். இது ஜனாதிபதிக்கும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கும் விடுக்கும் இறுதி எச்சரிக்கையாகும்.

மக்கள் சமூதாயத்திற்காகத்தான் நீங்கள் வெறுமனே ஒரு கணக்காளர்களை நியமித்து நடிக்க வேண்டாம் இவை ஒரு பொம்மை நாடகம்.

பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியங்களின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தனது கருத்தில்,

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யானைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யப்போகின்ற சேவைகள் இரண்டு ஏமாற்றினோம், ஏமாற்றப் போகின்றோம், 1978 வட்டுக்கோட்டை தொடக்கம் இன்று வரை கூட்டமைப்பு நம்பிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது.

1968ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த திருச்செல்வத்திற்கு இது ஒரு சிறிய விடயம். தனது மருமகள் முஸ்லிமாக இருந்த ஒரு காரணத்தாலே இவற்றைச் செய்யவில்லை.

இதன் விளைவு ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்க முதல் கரைவாகுப் பற்றிலிருந்த ஒட்டுமொத்த தமிழர்களும் அடித்து விரட்டப்பட்டார்கள்.

வெறும் 22 ,000 தமிழ் வாக்காளர்கள் தானே என்று ஏளனமாக எண்ணுகிறார்கள் கூட்டமைப்பினர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மயிரிழையில் தான் ஒரு பிரதிநிதியை பெற்றமை குறிப்பிடத்தக்க விடயம்.

எமது பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவில்லை எனில் அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான பிரதிநிதித்துவத்தை இழப்பதோடு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தையும் இழக்க வேண்டிவரும்.

எனவே, இன்னும் நேரம் இருக்கிறது ஆதரவாக வாக்களிப்பதா? தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதா? என்று தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.


you may like this video

Latest Offers