மரண பதிவு வேண்டாம் மகனை தா! நீதி கோரி மன்னாரில் திரண்ட மக்கள்

Report Print Ashik in சமூகம்

காணாமலாக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடித்து தரக்கோரியும், நீதி கோரியும் சர்வதேசத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வலிந்து காணாமலாக்கப்பட்டோருடைய உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு என்பவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் வெளிவரும், சர்வதேசமே எங்களுக்கான நிரந்தர தீர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத் தாருங்கள், அம்மா என அழைக்க என் மகனை திருப்பிக் கொடு, மரண பதிவு வேண்டாம் மகனை தா உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வ மத தலைவர்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து வாசிக்கப்பட்ட மகஜர் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் ஐ.நா சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.