தாயிடமிருந்து குழந்தைக்கு சிபிலிஸ் மற்றும் எச்.ஐ.வி தொற்றினை இல்லாதொழித்துள்ளோம்: சத்யா ஹேரத்

Report Print Sumi in சமூகம்

தாயில் இருந்து, குழந்தைக்கு பரப்பப்படும் சிபிலிஸ் மற்றும் எச்.ஐ.வி தொற்றினை இல்லாதொழித்துள்ளதாக சமூக வைத்திய மற்றும் பாலியல் தொற்று வைத்தியர் சத்யா ஹேரத் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வேலைத்திட்டம் மிக நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, 2013 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு தாயில் இருந்து குழந்தைக்குச் செல்லும், சிபிலிஸ் மற்றும் எச்.ஐ.வி. தொற்றையும் இல்லாதொழித்துள்ளோம்.

இதை விஞ்ஞான பூர்வமாக உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு உறுதிப்படுத்தும், வேலைத்திட்டத்தை உலக சுகாதார திணைக்களத்தின் தேசிய பாலியல் தொற்று எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டமும், ஆரம்ப சுகாதார சேவைகள் திணைக்களமும் முன் நின்று செயற்படுத்தி வருகின்றன.

தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் குருதிப் பரிசோதனை செய்வதன் மூலமாக, கண்டுபிடித்து, அவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருந்தால், அதற்குரிய மருந்துகளை கொடுத்து, கடத்தலை நிறுத்தியுள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆரம்ப சுகாதார பிரிவும், தேசிய பாலியல் தொற்று மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவும், இணைந்து, தாய்மார்களிடம் இருந்து குழந்தைக்குச் செல்லும், சிபிலிஸை மற்றும் எச்.ஐ.வி ஓழித்துள்ளோம். சிபிலிஸ் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த செயற்பாட்டினை நடைமுறைப்படுத்திய பின்னர், 2018 ஆம் ஆண்டு, ஒரு குழந்தை கூட எச்.ஐ.வி தொற்றுள்ள குழந்தையாக பிறக்கவில்லை.

இலங்கையில் இருந்து, எச்.ஐ.வி. எயிட்ஸ் இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் உள்ளன. உலகலாவிய ரீதியில் எயிட்ஸ் இல்லாதொழிப்பதற்கான காலம், 2030 ஆம் ஆண்டு வரை உள்ளது. ஆனால், இலங்கையில் 2025 ஆம் ஆண்டு என வைத்திருக்கின்றோம்.

இலங்கையில் 33 இடங்களில், சிகிச்சை நிலையங்கள் உள்ளன. அந்த இடங்களில், வைத்திய பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட பல உள்ளன. அந்தவகையில், அனைத்து மாவட்டங்களிலும், இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.