சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - ஊரியான் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி ஊரியான் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்களாலும், பொதுமக்களாலும் பொலிஸாருக்கு பலதடவை தகவல்களை வழங்கிய போதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதேச செயலாளர், ஊரியான் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊரியான் கனகராயன் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு நேரடியாக சென்றுள்ளனர்.

மேலும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு உழவு இயந்திரத்தினையும், அதன் சாரதியையும் கைது செய்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு உழவு இயந்திரங்கள் தப்பிச்சென்றுள்ளன.

இன்றைய தினம் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வில் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் மற்றும் அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்தியும் நான்கு மணித்தியாலயங்களுக்கு மேலாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனவும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers