13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் இன்று சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலாவெளி - சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த (21 வயதுடைய) இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், சிறுமியின் அக்காவின் கணவர் இரவு நேரத்தில் உணவு வகைகளை கொண்டு வருவதாகவும், அதனை சாப்பிட்டவுடன் தூக்கம் வருவதாகவும் தனக்கு என்ன நடந்தது என தெரியாது எனவும் சிறுமி பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சோதனையிட்ட போதே 6 மாத கரு வயிற்றில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் அக்காவின் கணவரை கைது செய்துள்ளதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக குழந்தையை பிரசவித்த பின்னர் டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers