முல்லைத்தீவு - உப்புமாவெளியில் பகுதியில் வாடி எரிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு - அளம்பில் வடக்கு, உப்புமாவெளிப் பகுயில் இனந்தெரியாத நபர்களால் மீனவர் வாடி ஒன்று எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறிதொருவருடைய அனுமதிப் பத்திரத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வந்த வெளிமாவட்ட மீனவர் ஒருவருடைய சிறிய வாடி ஒன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வாடிக்குரிய வெளிமாவட்ட மீனவர் அனுமதிப்பத்திரமில்லாது, வேறு ஒருவருடைய அனுமதிப்பத்திரத்தில் தொழிலை மேற்கொண்டதுடன், உப்புமாவெளி மீனவர் சங்கத்துடனும் கடந்த காலங்களில் முரண்பட்டதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற முரண்பாடுகளையடுத்து, குறித்த வெளிமாவட்ட மீனவர் உப்புமாவெளி பகுதி மீனவர்களுக்கெதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று இரவு குறித்த வெளிமாவட்ட மீனவரது சிறியவாடி எரிக்கப்பட்டுள்ளது.

இந்த வாடி எரிப்புச் செயற்பாடானது, முரண்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்கும் நோக்கில், குறித்த வெளிமாவட்ட மீனவரே தீ வைத்திருக்கலாமென அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தினை அறிந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சம்மேளனங்களின் தலைவர் பேதுறுப்பிள்ளை பேரின்பநாதன் ஆகியோர் மீனவர்களிடம் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த இடத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளருக்கு தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், குறித்த எரிவடைந்த வாடிக்குரியவர் வெளிமாவட்டத்தினைச் சேர்ந்தவர் எனவும், பிறிதொருவருடைய அனுமதிப்பத்திரத்தில் உப்புமாவெளிப் பகுதியில் கடற்றொழிலினை மேற்கொண்டு வருகின்றார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Latest Offers