இலங்கையிலுள்ள அதிமுக்கிய நபர்களிடம் சூட்சுமமாக கொள்ளையடித்த கில்லாடி

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் கொண்டுவரும் வர்த்தகர் போன்று நடித்து பாரிய கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் பிரபல வெளிநாட்டு வைத்தியர்கள், பிரபல வர்த்தகர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்களை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை கொள்ளையடித்த நபர் நேற்று காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் காலி பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது சுகயீனமடைந்த மகளை விசேட பெண் வைத்தியரை சந்திக்க, கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சந்தேக நபர் சென்றுள்ளார்.

அங்கு தான் மோட்டார் வாகனம் விற்பனை செய்பவர் என குறிப்பிட்டுள்ளார். குறைந்த விலையில் நவீன ரக பென்ஸ் கார் ஒன்றை தன்னால் கொண்டு வந்து தர முடியும் என கூறியுள்ளார்.

அதனை நம்பிய வைத்தியர் சந்தேக நபரின் கணக்கில் 45 லட்சம் ரூபாவை வைப்பில் இட்டுள்ளார். பணத்தினை பெற்றதும் குறித்த பெண் வைத்தியரை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார். அத்துடன் தான் வசித்த விலாசத்தையும் அவர் மாற்றியுள்ளார்.

இதேபோன்று பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை இந்த நபர் பல்வேறு முறைகளில் ஏமாற்றியுள்ளார். அதற்கமைய இதுவரை எட்டுக்கும் அதிகமான முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.