இந்தியாவிலிருந்து மின்சார விநியோகத்தை இலங்கைக்கு பரிமாற்றம் செய்துக்கொள்ளும் ஒரு திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
புதுடெல்லியில் கடந்த 24ஆம் திகதியும் இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
இலங்கையில் மின்சார விநியோகம் தட்டுப்பாடு நிலவுகின்ற வேளையிலே இந்தியாவிலிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு அடிப்படை நடவடிக்கை இதன்மூலம் செய்யப்பட உள்ளது.
மதுரையில் இருக்கின்ற மின்சார நிலையத்திலிருந்து கடலுக்கடியில் கெபில்கள் அமைத்து அனுராதபுரத்தில் இருக்கின்ற மின்சார நிலையத்திற்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கி இதன் ஏற்பாடுகளுக்கான நிதியுதவி வழங்குகின்றது. இதற்கான அடிப்படை வேலைத்திட்டங்கள் ஏற்கனவே நிறைவு பெற்றிருக்கின்றன.
இந்த அடிப்படையில், இலங்கையில் மின்சார தட்டுபாடு ஏற்படுகின்ற வேளையில் மாத்திரம் இந்தியாவிலிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென மின்சார சபை தெரிவித்திருக்கிறது.
அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் இதுதொடர்பான உடன்பாடு விரைவில் எட்டப்படும் என மின்சார சபை தெரிவித்திருக்கிறது.