யாழ்.வலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களிடம் கையளிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் தலைமையில் இன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ஒத்துழைப்போடு விடுவிக்கப்படும் குறித்த காணிகள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன், ஆளுநர் அதனை யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரனிடம் வழங்கியுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் இன்றுவரை யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2963 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளதுடன் அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Latest Offers