உதயமாகின்றது கிழக்கின் தமிழர் கூட்டணி!

Report Print Gokulan Gokulan in சமூகம்

தாயகத்தின் இதயபூமியான கிழக்கு என்றும் இல்லாதவாறு இடர்பாடுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது என கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்அறிக்கையில்,

கால ஓட்டத்தின் அரசியல் மாற்றங்களை கருத்தில் கொண்டு காரியமாற்றாவிடின் கிழக்கில் பரந்துவாழும் ஈழத்தமிழரின் இருப்பு கேள்விக்குறியாகி விடும்.

நாம் அதிகமாய் நேசித்த இந்த இதயபூமி, அரசியல் பகடையாட்டங்களுக்கு பலியாவதை எம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியாது.

கிழக்கின் அரசியல் யதார்த்தமும் கலாசாரமும் தமிழர் அபிலாஷைகள் ஊடான செல்நெறிப்போக்கில் நின்று தடம் புரண்டுள்ளது.

தமிழரின் பண்பாட்டியலும் ஓர் மூத்த குடியின் நிலங்களும் அவர் பொருண்மியமும் அபகரிக்கப்படுவதனை தடுத்து நிறுத்த வேண்டுமானால் கிழக்கிலே ஓர் பலமான தமிழர் அரசியல் கூட்டமைப்பு தேவைப்படுவதினை உணர்ந்து, கிழக்கில் உள்ள புத்திஜீவிகள் செயற்பாட்டாளர்கள் கல்வியாளர்கள் அரசியல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூக அமைப்புக்களை இணைத்து அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை ஈழத் தமிழர் பேரவை நிறைவேற்றியுள்ளது

ஈழப்போர் ஓய்வடைந்ததின் பின்னரான ஒரு தசாப்த காலத்திற்குள் கிழக்கின் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை மனதில் இருத்தியும் கடந்த ஒரு தசாப்த காலமாக கிழக்கின் தமிழர் சார் சமூக, பொருளாதார, பண்பாட்டியல் மற்றும் அரசியல் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள துரதிஸ்டவசமான நிலைமைகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.

கிழக்கில் தமிழர்களுடைய அரசியல் தலைமைத்துவம் சம்பந்தமாக தற்போது ஏற்பட்டிருக்கின்ற விமர்சனங்களை மனதில் வைத்தும் 2009ஆம் ஆண்டுக்குப் பின் ஈழத்தமிழினத்தின் அரசியல் தலைமைகள் என்று தம்மை அழைத்துக்கொள்வோரின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளை இனங்கான வேண்டும்.

இப்படியானதொரு நிலைமை கிழக்கில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களை மேலும் நிர்க்கதியாக்குவதோடல்லாமல் தமிழினத்தின் சமூகப் பொருளாதார அரசியற் தளங்களில் ஏற்படுத்தப்போகும் ஏற்றுக்கொள்ளவியலாத விளைவுகளைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

தனி, மனித மற்றும் ஒற்றைக் கட்சி மேலாண்மையானது தமிழரின் ஜனநாயக இயங்குதளங்களில் ஏற்படுத்தியுள்ள பின்னடைவுகளை இனங்காண வேண்டும்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டுமானால் அத் தீர்வை நோக்கியதான செல்நெறிப் போக்கில் காத்திரமாக பயணிக்கக் கூடிய ஓர் தமிழ்த் தேசிய கட்டமைப்பை கிழக்கில் உருவாக்கும் நோக்கத்துடனும் பல்லாண்டு காலமாக கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் நில ஆக்கிரமிப்பு, அரசியல் ஓரவஞ்சனை காரணமாக நிலவும் அபிவிருத்தியின்மை வேலைவாய்ப்பின்மை பண்பாட்டியல் சிதைப்பு போன்ற இடர்பாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்த நோக்குடனும் கிழக்கில் இடருற்ற மக்கள், முன்னாள் போராளிகள், அங்கவீனமுற்றவர்கள், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் இன்னலுற்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு கருதியும் கிழக்கில் சமகால தமிழர் அரசியலின் செல்நெறிப்போக்கு மற்றும் அரசியல் கலாச்சாரத்தை தீர்க்கமாக புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய தமிழர் பரப்பின் அரசியற் கட்சிகளை இணைத்து கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் சமூகப் பொருளாதார, பண்பாட்டியல் இலக்குகளை அடைவதற்கான ஓர் பாரிய அரசியற் கூட்டமைப்பை உருவாக்கி காத்திரமாகப் பயணிப்பதற்கான ஒர் பூர்வாங்க கலந்துரையாடலுக்காக தமிழர் தரப்பின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கின் ஈழத்தமிழரின் அரசியற் போக்கை நெறிப்படுத்த தேசப்பற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து கொள்ளும் என கிழக்கின் தமிழர்கள் நம்புகிறோம்.

இது தொடர்பான சகல கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலானது எதிர்வரும் 14.07.2019ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் 15.30 வரையில் கல்லடி நொச்சிமுனை வடக்கில் அமைந்துள்ள சனிபிஸ் தங்குமிடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.