பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்று தரக் கோரி ஹட்டனில் கையெழுத்து வேட்டை நடைபெற்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் இன்று காலை இக் கையெழுத்து வேட்டையை ஆரம்பித்திருந்தனர்.
தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையினை நிறைவேற்றாத அரசாங்கத்தை, வீட்டுக்கு அனுப்புவதற்கு தோட்ட தொழிலாளர்கள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள மலையக அமைச்சர்கள் தொழிலாளர்களுக்கு பாதீட்டில் பெற்று தருவதாக கூறிய 50 ரூபாவை இதுவரை வழங்க முடியாமல் வக்கத்து போயிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளதுடன், இதனை உடனடியாக பெற்றுக் கொடுக்கும்படி அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50ரூபாவினை வழங்குவதாக கூறிய அரசாங்கம் இதுவரை 50 சதத்தை கூட வழங்கவில்லை. தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் பெற்று கொடுக்க புதிய ஒரு அமைப்பை கட்டி எழுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, 100இற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடதக்கது.