மைத்திரியை எச்சரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி கமிஷன் ஒன்று நியமிக்கப்பட்டால் மைத்திரிபால சிறிசேனவும் குற்றவாளியாக இனம் காணப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இந்நாட்டில் அரசியல் சதி ஒன்று இடம்பெற்றது. அரசியல் யாப்பு ரீதியிலான சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. மக்களின் போராட்டத்திற்கு பிறகு இந்த அரசியல் சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் எமக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தபோதும், சட்டம் ஒழுங்கு அமைச்சு எமக்கு கிடைக்கப் பெறவில்லை.

பாதுகாப்பு அமைச்சோடு சேர்த்து சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்துக் கொண்டார். சட்டம் ஒழுங்கு என்பது இந்நாட்டின் பாதுகாப்போடு தொடர்புள்ள ஒரு விடயமாகும். கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் ஜனாதிபதியே இதனை வைத்துக்கொண்டார்.

இன்று ஜனாதிபதிக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஜனாதிபதி குண்டுத் தாக்குதலின் பின்னர் குழு ஒன்றை நியமித்தார். சட்டரீதியான எந்த அந்தஸ்தும் இல்லாத எந்த வலுவுமில்லாத மூன்று நபர்களைக் கொண்ட ஒரு குழுவை ஜனாதிபதி நியமித்தார் இதற்கு பதிலாக அவருக்கு விசேட ஜனாதிபதி கமிசன் ஒன்றை நியமிக்க முடியும். ஆனால் அவர் அதனை நியமிக்கவில்லை. அது ஏன்? ஜனாதிபதி கமிஷன் ஒன்றை நியமித்தால் அவரும் குற்றவாளியாக இனம் காணப்படுவார்.

ஜனாதிபதி வேண்டுமென்றே தனது பொறுப்பிலிருந்து நழுவிய விடயம் வெளியே வந்து விடும் . அது மட்டுமல்லாமல் ஜனாதிபதி கமிஷன் அறிக்கை மக்கள் முன் சமர்ப்பிக்கப்படவும் வேண்டும்.

இதன் காரணமாகவே ஜனாதிபதி , ஜனாதிபதி கமிஷன் ஒன்றை அமைக்காமல் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அதன் அறிக்கையின் படி பொலிஸ்மா அதிபரையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் சிறையில் அடைத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேவிபியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தில் ஜனாதிபதியின் பெயர் குறிப்பிடப்படாமை தொடர்பிலும் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers