யுத்தம் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் மக்களுக்கு தீர்வு இல்லை தொடருமானால்....

Report Print Malar in சமூகம்

யுத்தம் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மக்களுக்கு தீர்வை காண்பிக்காதே போனால் மக்கள் மத்தியில் மீண்டும் வெறுப்பும், குழப்பங்களும், அலட்சியங்களும் வந்துவிடும் என ராஜதானி நிலையம் தெரிவித்துள்ளது.

ராஜதானி நிலையத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்அறிக்கையில்,

ஐக்கிய நாட்டு சபைக்கு சென்ற எனது அறிக்கையை கடந்த 21ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் நடைப்பெற்ற தீவிரவாத தாக்குதல்களின் நிமித்தமும், அதன் பதற்ற நிலையான காலக்கட்டத்தின் நிமித்தமும் நான் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் சமர்பிக்க எனக்கு சரியான கால அவகாசம் தேவைப்பட்டது.

இன்று இவற்றை வெளியிடுவது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தகுந்ததாக அமையும்.

கடந்த 18/03/2019 தொடக்கம் 22/03/2019 ஆகிய திகதிகளில் இலங்கை மக்களின் பிரதிநிதியாக ஐக்கிய நாட்டு சபைக்கு நான் சென்றேன்.

இலங்கையில் யுத்தமானது இன்று ஓய்ந்திருந்தாலும், இன்றும் மக்கள் மத்தியில் அதன் பாரிய விளைவுகள் கவலைகொள்ளும் வண்ணமே உள்ளது.

எனது பிரதான நோக்கம் இன்று ஏற்பட்டுள்ள இந்த சமாதானமானது நீடித்து, இரண்டு இன மக்களும் சமத்துவமாக சுகமாக வாழ்வதே!

எமது மக்கள் இவ்வளவு காலமும் கண்டு அனுபவித்த கஷ்டங்கள் நீங்கி, தங்கள் வாழ்க்கை தராதரத்தினை உயர்த்துவதற்கும், இனி வரும் இளம் சமுதாயம் நல்ல கல்வியிலும் வாழ்விலும் மேலோங்கவும் இரு இனத்தவர்கள் மத்தியில் சமாதானமானது மிகவும் முக்கியமானதாகும்!

இவ் சமாதானத்தை நம் தனிப்பட்ட கோட்பாட்டிற்காக உடைப்பது, நம் இளைஞர்களின் வருங்காலங்களை நாம் உடைப்பது போன்றதாகும். மேலும் சமாதானமானது மக்களையும் நாட்டையும் வலுப்படுத்தவேயன்றி, அதை பிழையாக பாவித்து நம்மை கெட்டுப்போகவைப்பதற்காக அல்லவே!

நான் ஐ.நாவில் எவ்வித இலங்கை அரசியல் அமைப்புகளையும் சார்ந்து பேசாது, மக்கள் தரப்பில் இலங்கை மக்களின் சுமூகமான வாழ்க்கை தரத்திற்காகவே பேசினேன். என் மனதில் உள்ள பாரத்தை அங்கு எனது இலங்கை மக்கள் நிமித்தம் காண்பித்து, சமாதானத்தை ஒற்றுமையாக பேனுவதின் அவசியத்தை காண்பித்தேன்.

பல ஊடகங்கள் நான் கூறாத ஒன்றை கூறினேன் என்று பலவகையான பிழையான செய்திகளை வெளியிட்டிருந்தாலும், என் கடமைகளை நான் மக்களுக்காக அவர்கள் வருங்கால நலன்களுக்காக செய்தையிட்டு நான் பெருமைப்படுகின்றேன்.

போர்த்துக்கேயர் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை கைப்பற்ற முன் யாழ்ப்பாண அரச ராஜ்ஜியமானது தனித்தியங்கும் சுயாதீன அரசாட்சியாக இருந்தது.

பின்னர் அவை ஒல்லாந்தர்களால் கைப்பற்றப்பட்டு, இறுதியாக ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. அன்று இலங்கை தீவில் இருந்த மூன்று சுயாதீன அரச நாடுகளை அவர்கள் ஒன்றாக இணைத்து ஒரு நாடாக ஆங்கிலேய முடியாட்சிக்குள் ஒன்றிணைத்தார்கள். இலங்கை மக்களின் தனி ஆட்சி கோரிக்கைக்குப் பின்னர் ஆங்கிலேயர் இலங்கை தீவை ஒரு தனி நாடாக சுதந்திரம் கொடுத்து விடைபெற்றார்கள்.

இக்காலங்களில் தமிழர் சிங்களவர் ஆகிய நாம் அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து வாழ்வோம் என ஆங்கிலேய அரசுக்கு உறுதியளிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது! இவ்வாறாக அன்று மூன்று நாடுகளாக இருந்த இலங்கைத்தீவு இன்று ஒன்றாக சோசலிச ஜனநாயக அரசாங்கமாக மாறியது.

இன்று பலர் மதியீனமாக கூறுவது போல் நான் மறுபடியும் யாழ்ப்பாணத்தை என் வசமாக்க முயல்கின்றேன், நான் அனைத்து இலங்கையை தீவையும் ஆட்சி செய்ய விரும்புகின்றேன் என்பதெல்லாம் மடத்தனம்! ஏனெனில் நான் மக்களின் ஜனநாயகத்தை மதிக்கின்றேன். அத்துடன் நான் இலங்கை நாட்டு அரசியல் விதிமுறைகளுக்கும் மதிப்பளிக்கின்றேன்.

எனினும், நான் இலங்கைத்தீவின் அரச சரித்திரத்தின் பங்காக உள்ளதால், என் அரச கடமைகளையும் நான் என் அனைத்து இலங்கை மக்களுக்காக செய்ய கடமைப்பட்டுள்ளேன், அதை செய்யவும் வாஞ்சிக்கின்றேன்.

ஆகவே தங்கள் சுய பெருமைக்கும், புகழுக்கும் சண்டையிடும் அரசியல்வாதிகளோடு என்னை ஒப்பிடவேண்டாம். நான் அரசியல்வாதிகளை விட மேலானவன், நான் அரச வம்சத்தான்! நான் ஒன்றை அடைந்து புகழ்பெற வேண்டிய அவசியங்கள் இல்லை, ஏனேனில் நான் மறைந்து செயற்பட்டாலும் என் அரச வம்சத்து பிறப்பு மாறாது!

என்னை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு எனது அறிவுறை யாதெனில், எந்த ஊடகங்களும் மக்களுக்கு உண்மையை காண்பிக்க வேண்டும். ஏனெனில் ஊடகங்களே குருடான உலகத்திற்கு கண்கள். நீங்கள் நன்கு பகுத்தறிந்து உண்மைகளை மக்களுக்கு கூறாவிட்டால் நீதியின் சக்கரத்தில் அச்சாணியானது நீங்கியது போல் ஒருநாள் நியாயம் நீங்கிவிடும்.

நான் கூறாத விடயங்களை கூறியதாக நீங்கள் எழுத முன் என்னோடு நீங்கள் அறிந்தவை உண்மைதானா என விசாரிப்பதற்கு நான் ஊடகங்களை ஒருபோதும் புறக்கணித்தது இல்லை. மனதில் கொள்ளுங்கள் மக்களை ஏமாற்றி வாழ்வதற்கு நான் அரசியல்வாதியல்ல. எனிலும் என் இலங்கை மக்கள் நீங்கள் கூறும் பிழையான செய்திகளை நம்பாது, என்னிடம் அவர்கள் கவலைகொண்டு முறையிட்டு என் மேல் உள்ள நம்பிக்கையையும் விசுவாசத்தையும் காண்பித்தமையை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அன்று மக்கள் அரசனை தேடி வந்தார்கள், இன்று நான் உங்களை தேடி வருகின்றேன் என்று நான் சொல்வதைப்போல, இன்றும் என்னை தொடர்புகொள்ளும் மக்களுக்கு என்னால் முடிந்த பணிகளை உரக்க கூறி மன ரம்மியமாக செய்ய நான் ஆவலாக உள்ளேன். என்னை தொடர்புகொண்டு தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.

இலங்கை அரசாங்கங்கத்திற்கு நான் கூறவிரும்புவது என்னவெனில், அன்று தமிழர், சிங்களவர் பிரச்சினைகளை ஞானமாக தீர்க்க முடியாது 30 வருட கால யுத்தத்தை சந்தித்ததுபோல இன்று ஐ.நா சபையில் பல ஆண்டுகள் தமிழர் சிங்களவர் பிரச்சினைகளை இழுத்துக்கொண்டு போகாது, வடக்கு மக்களில் யுத்தத்தில் காணாமல் போனவர்களையும், வடக்கு மக்களின் அபகரிக்கப்பட்ட காணி விவகாரத்தையும் சீக்கிரமாக விசாரணை செய்து, மக்களின் சமரச செயல்முறைக்கு உடனடியாக ஒரு தீர்வை மக்களுக்கு கொடுத்து, மீண்டும் யுத்த அபாயம் இலங்கை மக்களுக்கு வராதவண்ணம் என் மக்கள் ஒற்றுமைகளை காக்க வேண்டும் என நான் கட்டளையிடுகின்றேன்!

யுத்தம் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மக்களுக்கு தீர்வை காண்பிக்காதே போனால் மக்கள் மத்தியில் மீண்டும் வெறுப்பும், குழப்பங்களும், அலட்சியங்களும் வந்துவிடும்!

உங்கள் அரசியல் கட்சிக்குள் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு ஒரு ஜனநாயக அரசாங்கம் மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை கட்டாயம் மக்களுக்கு செய்யுங்கள்!

யுத்த காலங்களில் அமைதியாக இருந்து, எவ்வித எதிர்ப்புகளையும் தெரிவிக்காது, யுத்தத்தில் மக்களின் அவலநிலைகண்டு எவ்வித அரசியல் சார்பாக நடவடிக்கைகள் எடுக்காது அமைதியாக இருந்த வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் இன்று ஐ.நா சபையில் பங்கு வகித்தது எனக்கு வியப்பளிக்கிறது.

அன்று அவர்கள் தங்கள் அரசியல்த் பெலத்தைக் கொண்டு மக்களுக்கு ஒன்றும் செய்யாது, குறிப்பிட்ட அந்நபர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்று அவர்கள் மக்களுக்கு உதவ முன்வருவது போல் காண்பிப்பதை கண்டு ஆச்சரியம் கொண்டேன். அவரின் பெயரை பாவித்து இன்று மக்கள் மத்தியில் வாக்குகளை எடுக்க நினைக்கின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் செலவு செய்யும் பணத்தை வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அமைப்புகளும் வடக்கு கிழக்கு மக்கள் அபிவிருத்திக்கு செலவு செய்தால் மக்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.

உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க நம் இலங்கைத்தீவில் படித்த நல்ல நீதியை காக்கும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் இல்லையா? உள்நாட்டில் தீர்வை காண சான்றோர் இல்லாது வெளிநாட்டு சபைகளில் இலங்கை மக்களில் பணத்தை வீணாக வாரி வாரி செலவுசெய்யும் அளவிற்கு மக்களுக்கு நீதி கூற இலங்கையில் இன்று படித்த பட்டதாரிகள் இல்லையா?

ஒரு காலத்தில் ஆசியா கண்டத்திலேயே படித்தோர், சிறந்தவர்கள், சாதித்தவர் பிறந்த நம் இலங்கைத்தீவில் இன்று இவ் குழப்பங்களை விசாரிக்க ஒரு நல்ல நபர்கள் இல்லாத அவலநிலை இலங்கைக்கு வந்துவிட்டதென நான் நினைக்கும் போது வெட்கப்படுகின்றேன்!

மக்களின் பணம் வீணாக செலவாகின்றது, நம் மக்கள் மத்தியில் படித்தார் இல்லாததினால் நாம் வெளிநாட்டவரை சந்தித்து நீதி கேட்டும்வண்ணம் இலங்கையில் நீதி இல்லை, படித்தார் இல்லை, மக்கள் நலன் கருதுவோரும் இல்லை! அன்று இந்திய சமுத்திரத்தின் முத்தாக விளங்கிய இலங்கைத்தீவு, இன்று அதன் விலைமதிப்பை வெளிநாட்டவர் மத்தியில் இழப்பதைக்கண்டு கவலைகொள்கின்றேன்!

இலங்கை தீவானது சகோதரத்துவம் என்னும் கடலில் சூழ்திருந்து, சமாதானம் என்னும் பசுமையில் செழித்து இருந்து, பல இளைஞர்களை மாணிக்கங்களாக உலகிற்கு வெளிக்கொண்டு வர நான் கடவுளை வேண்டுகின்றேன் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.