யாழில் இருந்து கன்னியாவிற்கு சென்றவர்களுக்கு இராணுவத்தினர் செய்த மோசமான செயல்

Report Print Jeslin Jeslin in சமூகம்

திருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெற்ற போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்கள் கடுமையான சோதனை கெடுபிடிகளை எதிர்கொண்டுள்ளன.

முல்லைத்தீவு ஊடாக கன்னியாவுக்கு செல்லும் பேருந்துகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பெருமளவானவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருக்கும் வழியில் புல்மோட்டை பகுதியில் புல்மோட்டை முல்லைத்தீவு வீதியிலும், புல்மோட்டை திருகோணமலை வீதியிலும் 3 இடங்களில் போராட்டத்திற்கு செல்லும் பேருந்துகள் மட்டும் தனியாக அடையாளப்படுத்தப்பட்டு அதில் பயணிப்பவர்கள் கடுமையான உடல் உடமை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டத்திற்கு செல்பவர்களையும் பேருந்துகளையும் இராணுவம் மற்றும் பொலிஸார் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளனர்.

மேலும் பருத்தித்துறையிலிருந்து புல்மோட்டை ஊடாக கன்னியா போராட்டத்திற்கு சென்ற பேருந்தை வழிமறித்து படையினர் மற்றும் பொலிசார் பரிசோதனைகளை செய்தபின் பேருந்தின் முன் சில்லுக்கு காற்று போகும் விதமாக இரகசியமாக கூரிய ஆயுதத்தால் குற்றி காற்றுபோக செய்துள்ளதாக அதில் பயணம் செய்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞரொருவர் கருத்துத் தெரவிக்கையில்,

நாங்கள் இந்த போராட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது இடைநடுவில் மறித்தவர்கள் பேருந்தின் சில்லுகளை பழுதாக்கியுள்ளனர்.

மேலும் சிறிது தூரம் செல்ல எங்களை மீண்டும் மறித்து ஒரு மணித்தியாலம் தடுத்து வைத்திருந்தனர்.

அதன் பின்னர் மேலும் ஒரு இடத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கும் உயர் அதிகாரிகள் சிலர் வந்தவுடன் அனுப்புவதாக கூறி அரை மணித்தியாலம் தடுத்து வைத்திருந்தனர்.

பிறகு மூன்று மணித்தியாலத்தின் பின்னர் நாங்கள் கன்னியாவிற்குச் சென்ற பின்னரும் கூட எங்களை வழிபடுவதற்கு உள்ளே அனுமதிக்கவில்லை.

அங்கு சிங்களவர்கள் உள்ளே செல்கின்றார்கள், பூஜைகளை நடத்துகின்றார்கள் ஆனால் எங்களுக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

குறித்த பகுதியில் யாரும் செல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் அந்த உத்தரவு எங்களுக்கு மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டது. அங்கு சிங்களவர்களின் பூஜைகள் அனைத்தும் நடைபெற்றன ஆனால் நாங்கள் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி தடுத்து நிறுத்தப்பட்டோம்.

நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் ஒரு தாய் மீது சிங்களவர் ஒருவர் தேநீரை ஊற்றியுள்ளதுடன், நாங்கள் வரும்போது அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார்.


you may like this video

Latest Offers