இந்திய வம்சாவழி மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது: இந்திய துணைத்தூதர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

இந்திய வம்சாவழி மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப் பரிசில்களை வழங்குகின்றது என இந்திய துணைத்தூதர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியா, புளியங்குளம், பழையவாடி தம்பா மல்லிகை பண்ணையில் மல்லிகை நறுமணத் திரவ உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

இந்திய துணைத்தூதரகத்தின் ஆதரவுடன் வவுனியா, புயிளங்குளம் தம்பா மாதிரிப் பண்ணையில் மதுரை மல்லிகை செய்கை பண்ணப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஊடாக சனசமூக நிலையங்கள் மூலம் கிராம மட்டத்தில் 100 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மல்லிகை கன்றுகள் செய்கை பண்ணுவதற்காக வழங்கப்படுகிறது.

குறித்த மல்லிகை செடிகளில் இருந்து குறித்த பண்ணை பூக்களை கொள்வனவு செய்து அந்த பூக்களில் இருந்து மல்லிகை நறுமண திரவம் தயாரிக்கப்படவுள்ளது. இத் தொழிற்சாலைக்கான அடிக்கல் இந்திய துணைத்தூதரால் நாட்டப்பட்டது.

இதன்போது இந்திய துணைத்தூதர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையும் இந்தியாவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது எங்களது அவா. மலையக மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை இந்தியா வழங்குவது போன்று இந்திய வம்சாவழி மக்களுக்கு இந்தியா பல புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றது.

பல்வேறு துறை சார்ந்த புலமைப்பிரிசில்கள் வழங்கப்படுகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. எவ் நேரமும் எமது தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அதனைப் பெற முடியும்.

அத்துடன், படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். தமிழர்களுக்கு படிப்பு தான் முக்கியம். நன்றி உடையவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். தோட்டம் செய்து கொண்டும் படிக்க முடியும்.

மல்லிகைத் தோட்டத்திற்கும் அது சார்ந்த உற்பத்திகளுக்கும் நாம் தொடர்ந்தும் ஆதரவு கொடுத்து வருக்கின்றோம். இதன் மூலம் நீங்கள் இலாபமீட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, முன்னாள் அரச அதிபர் தில்லை நடராஜா, அகத்தேசிய முற்போக்கு கழக செயலாளர் நாயகம் எம்.பி.நடராஜா, சட்டத்தரணி க.தயாபரன் மற்றும் கிராம மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மல்லிகை செய்கையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers