கன்னியா வெந்நீரூற்று விடயத்தில் பௌத்த - சிங்கள இனவெறியின் கோர முகம் அம்பலம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோவில் இடித்து அழிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு திரண்ட தமிழ் மக்களுக்கு எதிராக பௌத்த – சிங்கள இனவெறி தனது கோர முகத்தைக் காட்டியுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

தென்கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகள் மீதும் கன்னியா வெந்நீரூற்றுக் காணியின் உரிமையாளரான பெண் ஒருவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட கீழ்த்தரமான தாக்குதல் மூலம் பௌத்த – சிங்கள இனவெறியின் காட்டுமிராண்டித்தனம் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தி சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட அங்கிருந்த பொலிஸ் படை தவறியிருக்கின்றது.

மாறாக அங்கு திரண்டு வந்திருந்த தமிழ் மக்கள் மீது அடக்குமுறை கலந்த அழுத்தம் பொலிசாரால் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி செயற்பட வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் சிங்கள – பௌத்த உணர்வாளர்களாகச் செயற்பட்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

இவற்றுக்கெல்லாம் மூல காரணம் நல்லாட்சி அரசாங்கத்தின் அணுகுமுறையும் ரூபவ் நடவடிக்கைகளுமே ஆகும்.

இனவெறியுடன் செயற்படும் தொல்லியல் திணைக்களம் அதிகாரப்பிரபுக்களை விருப்பம் போல ஆடவிட்டு சிங்கள – பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு மறைமுகமான ஆதரவை அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வந்திருக்கின்றது.

அரசாங்கத்திற்குள்ளே ஓர் அரசாங்கம் போலவே தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வந்துள்ளது.

ஆயிரம் விகாரைகளை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அமைக்கப் போவதாக கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பகிரங்கமாக பிரகடனம் செய்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமை தாங்கும் நல்லாட்சி அரசாங்கமே கன்னியா பிரச்சினைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

இதே வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில்லை என்றால் நான் இன்று பிரதமராக உங்கள் முன் நின்று கொண்டிருக்க முடியாது என்று சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை நகரில் மனந்திறந்து பேசிய ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு கன்னியா பிரச்சினையில் தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவதோடு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுத்தாக வேண்டும்.

கூட்டமைப்பின் தலைவரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் திருகோணமலை மாவட்டத்தில் தமது அடிப்படை உரிமைகளுக்கு தமிழ் மக்கள் போராட வேண்டியுள்ள நிலைமையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைக்க கூட்டமைப்பு தவறினால் அதன் நாட்கள் எண்ணப்படும் நிலைமை தவிர்க்கப்பட முடியாதது என்பதை சம்பந்தப்பட்ட சகலரும் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தனை காலமும் எமது இனத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் இந்திய துணைக் கண்டத்தில் வாழும் எட்டு கோடி தமிழர்களின் ஆதரவையே நாம் தொடர்ந்து நாடி வந்திருக்கின்றோம்.

ஆனால், தமிழ் இனத்தின் வரலாற்றையும் இருப்பையும் வாழ்வையும் சிதைக்கச் செயற்படும் பௌத்த – சிங்கள்பேரினவாதம் இந்துக் கோவில்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் தொடர்ந்து குறிவைக்கப் போகிறது என்றால் இந்தத் திட்டத்தைத் தகர்த்தெறிய இந்திய நாட்டின் நூறு கோடிக்கு மேற்பட்ட இந்துக்களின் நேரடித் தலையீட்டை நாம் பகிரங்கமாக கோர வேண்டியிருக்கும்.

என்பதை சகல சிங்களக் கட்சிகளையும் சேர்ந்த பௌத்த – சிங்கள பேரினவாதிகள் அனைவருக்கும் நாம் கூறிக்கொள்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers