கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத்தக்கது ! சரவணபவன் எம்.பி. கடும் கண்டனம்

Report Print Rakesh in சமூகம்

திருகோணமலை கன்னியா பகுதியில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத் தக்கவை. பேரினவாதிகளின் இத்தகைய காட்டுத்தனப் போக்கை அரசு உடன் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் அது நாட்டின் நல்லிணக்கத்தில் எதிர்பாராத அளவு எதிர்மறையான தாக்கத்தை உண்டுபண்ணும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கன்னியாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் இன்று அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்துக்கு உணர்வெழுச்சியுடன் திரண்டு சென்ற தமிழ் மக்கள் நடத்தப்பட்ட விதம் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றது.

தென்கயிலை ஆதீனக் குருமுதல்வர் தவத்திரு அடிகளார் மீதும், கோயில் உரிமம் உடையவரான கணேஸ் கோகிலரமணி மீதும் எச்சில் தேநீர் ஊற்றிய காடையர்களின் வெறியாட்டம் அருவருப்பை ஏற்படுத்துகின்றது.

சிறுபான்மை மக்களும் அவர்களின் மதத் தலங்களும் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்படுகின்றமை இதுவொன்றும் புதிதல்ல. இது தொடர்பான பதிவுகள் இலங்கையில் ஏராளம் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன.

தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவர அரசு இதய சுத்தியுடன் செயற்பட வேண்டியது அவசியம். இல்லையேல் விளைவுகள் பாரதூரமானவையாகவும், தவிர்க்கப்பட முடியாதவையாகவும் அமைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.