கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் அவதிப்படும் மக்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் அதிகரித்ததனை தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தோட்டத்தொழிலாளரகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கோதுமை மா அதிகரிப்பின் காரணமாக கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் அனைத்து பேக்கரி உணவு பொருட்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

தோட்டத்தொழிலாளர்கள் தங்களது நாளாந்த உணவின் பெரும் பகுதியினை கோதுமை மாவின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர்.

காலை வேளையிலும் இரவு வேளையிலும் அவர்களுக்குரிய நேரத்திற்கேற்ப கோதுமை மாவினை பயன்படுத்தி அவர்கள் தங்களுக்கு தேவையான உணவினை தயாரித்து கொள்கின்றனர்.

இவ்வாறான சூல்நிலையில் குறைந்த சம்பளம் பெரும் இவர்கள் தற்போது அதிகரிக்கப்பட்ட மாவின் விலை காரணமாக தாங்கள் மேலும் மேலும் பொருளாதார சுமைக்கு தள்ளப்படுவதாகவும் தங்களுக்கு அரசாங்கம் அதிகரிப்பதாக கூறிய சம்பள அதிகரிப்பு அதிகரிக்காத நிலையில் பொருட்களின் விலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லாட்சியின் மூலம் தங்களுக்கு விடிவு கிட்டும் என்று எதிர்ப்பார்த்த போதிலும் அரசாங்கம் தொழிலாளர்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை என இவர்கள் விசனம் தெரிவிக்கும் அதே வேளை அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களது பொருளாதார நிலைமையினை கருத்தில் கொண்டு கோதுமை மாவின் விலையினை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தொழிலாளர்களுக்கு மானியமாவது வழங்க முன்வர வேண்டும் எனவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் தான் வேலை செய்கின்றோம். சோறு சமைத்து கொண்டு போய் தேயிலை மலையில் சாப்பிடமுடியாது ஆகவே தான் நாங்கள் பிரதான உணவாக ரொட்டியினை சாப்பிடுகின்றோம்.

அத்தோடு அதிகாலையில் எழுந்து எங்களது பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்து விட்டு எங்களுக்கு சோறு இரண்டு மூன்று கறி என சமைக்க நேரம் இருக்காது.

ஆகவே தான் நாங்கள் எங்களுக்கு இலகுவாக செய்யக்கூடிய உணவுகளை செய்துகொள்கிறோம். தோட்டத்தில் வேலைக்கு காலதாமதமாகி சென்றால் எங்களுக்கு குறித்த இறாத்தல் கொழுந்து பறிக்க முடியாது.

அவ்வாறு பறிக்காவிட்டால் அரை நாள் பெயர் தான் பதிவார்கள், பொருளாதார சுமையில் வாழும் இவ்வாறான விலை உயர்வுகள் மூலம் மேலும் நாங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.

இந்த அரசாங்கத்தினை தெரிவு செய்வதற்காக நாங்கள் எங்களது வாக்குகளை பயன்படுத்தினோம்.

காரணம் எங்களுக்கு இவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று ஆனால் இவர்கள் சம்பளம் அதிகரிப்பதாக தெரிவித்த வாக்குறுதியும் நிறை வேற்றவில்லை.

மாறாக பொருட்களின் விலையினையே அதிகரித்து வருகின்றனர் என இவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.