கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

மலையகத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பல பகுதிகளில் மழை பெய்து வருகின்ற அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கடும் குளிரும் நிலவுவதனால் பல்வேறு தொழில் துறைகள் முடங்கி போயுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட ஹட்டன் பொலிஸ் நிலைய வீதியில் இன்று பகல் மண்திட்டு சரிந்து வீழ்ந்ததில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடும் மழையின் காரணமாக லக்ஸபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 06 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீர்த்தேக்கத்தினை அண்டி வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் அதிகமான தொழிலாளர்கள் கொழுந்து பறிப்பதற்கு சமூகம் தரவில்லை என்றும் இதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.

காலை முதல் இடை விடாது மழை பெய்து வருவதனால் கால்நடை உற்பத்தியாளர்கள் தங்களது கால் நடைகளுக்கு தேவையான புற்களை அறுக்க முடியாது சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மழை காரணமாக மலையக நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன.


you may like this video