யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஆரோக்கியா உணவகம்

Report Print Ashik in சமூகம்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பிரிஜிங் லங்கா நிறுவனத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்ட ஆரோக்கியா உணவகம் மற்றும் கல்வி நிலையம் என்பன இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட வண்ணா குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நிலையங்கள் இலங்கை மாலைத்தீவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிற் கோலியால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வண்ணா குளத்தைச் சேர்ந்த பெண்களினால் குறித்த உணவகம் முகாமைத்துவம் செய்யப்படவுள்ளது.

போரினால் கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், வலுவிழந்த கணவர்களுடன் வாழும் பெண்கள் தொடர்ச்சியாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வகையில் குறித்த உணவகம் மற்றும் கற்றல் வள நிலையம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் மாந்தை பிரதேச சபை தலைவர், பிரிஜிங்லங்கா ஊழியர்கள் உட்பட அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கற்றல் வள நிலையத்தின் ஊடாக வேலை வாய்பை பெற்ற பெண்களுக்கு கணனி மற்றும் சமையல் தொடர்பான கற்கை நெறிகளும் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.