வவுனியா நகரசபையை திடீர் முற்றுகையிட்ட அங்காடி வியாபாரிகள்

Report Print Thileepan Thileepan in சமூகம்
60Shares

வவுனியாவில் வியாபாரம் செய்யும் அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு நிரந்தரமான இடம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று வவுனியா நகரசபையை முற்றுகையிட்டனர்.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக வீதிகளில் வியாபாரம் மேற்கொள்வது வவுனியா நகரசபையினரால் தடை செய்யப்ட்டுள்ளமையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்த முற்றுகை நடைபெற்றிருந்தது.

வவுனியா நகரசபை உறுப்பினர்களையும் முற்றுகையிட்ட அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு ஓர் தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன் காலையிலிருந்து நகரசபை தலைவர் தங்களை சந்திக்க மறுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அங்காடி வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகரசபை தலைவர் இ.கௌதமன், தற்போது அங்காடி வியாபாரிகளுக்கு தற்காலிகமாக இடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிரந்தரத்தீர்வு வெகு விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

நகரசபை தலைவருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவித்த சிறு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யூ.அயூப்கான், கடந்த 20 வருடங்களாக சிறு வியாபாரிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எமக்கு ஒரு நிரந்தரமான இடம் பெற்றுத்தருவதாக நகரசபை தலைவர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.