அங்கீகரிக்கப்படாத மணல் அகழ்வு! அபாய கட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள்

Report Print Yathu in சமூகம்

சட்ட ரீதியற்ற முறையில் அங்கீகரிக்கப்படாத இடங்களில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் மிக மோசமாக பாதிப்படையக் கூடிய வாய்ப்பு இருப்பதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுவதுடன், வயல் நிலங்கள், ஆறுகள் வீதிகள் என்பனவும் சேதமடைந்து வருகின்றன.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதனடிப்படையில் எதிர்காலத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் கட்டுப்படுத்துவதற்கான முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட ரீதியற்ற மணல் அகழ்வுகளை உடனடியாக தடுக்க, கட்டுப்படுத்த வேண்டியதன் அடிப்படையிலேயே பல்வேறு வகையான தந்திரோபாயங்கள் முன்வைக்கப்பட்டு, அதனை உடனடியாக நடைமுறைப் படுத்துவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

எதிர்காலத்தில் இந்த மாவட்டத்திலேயே இடம்பெறுகின்ற சட்டரீதியற்ற மண் அகழ்வுகளை தடுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் ராஜகோபு, கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கிராம ப. ஜெயராணி, பூநகரி பிரதேச செயலாளர் எஸ் கிருனேந்திரன், திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.