திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது! மரண தண்டனை உறுதி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு பிழையானது என மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிபதி வழங்கிய தீர்ப்பில் எவ்வித குறைகளும் இல்லை எனவும், வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முள்ளிப்பொத்தானை - ஈச்சநகர் பகுதியை சேர்ந்த ஹயாத்து முகம்மது அப்துல் அஸீஸ் என்பவர், அதே இடத்தை சேர்ந்த முகம்மது கதீஜா உம்மா என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணைகளின் போது நிரூபிக்கப்பட்டதையடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி எதிரிக்கு மரண தண்டனை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03ஆம் திகதி குறித்த தீர்ப்புக்கு எதிராக எதிரியினால் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு விவாதம் 2018 ஜுலை மாதம் பத்தாம் திகதி மேற்கொள்ளப்பட்டு மீண்டும் 2018 ஜுலை மாதம் 31ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டு, அந்த தீர்ப்பில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் வழங்கப்பட்ட தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பின் பிரதி 2019ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18ஆம் திகதி அதாவது நேற்றைய தினம் மட்டும் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பில் எந்தவிதமான குறைபாடும் இல்லை எனவும், குறித்த தீர்ப்பு உறுதியளிக்கப்பட்டு குற்றவாளியின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பை வாசித்து காண்பிப்பதற்காக குற்றவாளியை எதிர்வரும் மாதம் ஏழாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

Latest Offers